உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

243


கால்வீழ்த்தல் – காலிட்டுப் பெய்தல். விளி – கூப்பீடு; இடியின் முழக்கம்.

விளக்கம் : 'அவர் குறித்த காலத்துத் தவறாது வருவர்; ஆதலின், அவர் வருதற்கு முற்பட வந்த இக்கார்தான் மடமை உடையது.' இப்படிக் கூறுவதன் மூலம் அவள் துயரத்தை மறக்கவைக்க முயலுகின்றாள் தோழி. அவர்தாம் சூள் பொய்த்தனராதலின், அவர் அணங்கப்பெறுவர் என்னும் அச்சத்தையும் இதனால் போக்கியதாயிற்று. முல்லை யரும்புவது கார்காலத்து என்பதையும் சுட்டி அதனை உரைத்தானாகலாம். 'இவை நின் எயிறேர் பொழுதின்' என்றது, நலம் புனைந்து உரைத்து அவள் கவலையை மாற்றித் தெளிவித்ததாம். இக்காலவரவு அவர் சென்றிருக்கும் இடத்தும் உளதாம்; ஆதலின், அவர் சொற்பிழையாராய் நம்மை நினைந்து விரைவிலே திரும்புவர் என்பதுமாம். இதனைக் கேட்கும் தலைவி தன் துயர் மறந்து ஆற்றியிருப்பாளாவள் என்பதுமாம்.

'மடவது அம்ம மணிநிற எழிலி' என்றது, அவன் சொற் பிழையான் ஆகவே, காலவரவுக்கு முற்பட்டு எழுந்து தோன்றிய இம்மேகந்தான் மடமையுடையது எனக் கூறிப் பழித்ததாம்.

'எயிறு ஏர் பொழுது'—அவள் சிறு நகைபோல முல்லை அரும்புகளை ஈன்று தோன்றும் கார்காலப் பொழுதினைக் குறித்ததாம்.

பயன் : அவர்தாம் சொன்ன காலத்து வரவில்லை என்ற போதும், காலம் நம்மை நினைப்பிக்க, விரைவிலே வந்து சேரவேண்டும் என்று தாம் விரும்பி, அமைதி காண்பதாம்.

317. கண்கள் என்னாகுமோ?

பாடியவர் : மதுரைப் பூவண்டனாகன் வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது.

[(து-வி.) தலைவியை மணந்து கூடி இல்லறமாற்றக் கருதானாக, அவள் களவில் தரும் இன்ப நலத்தையே நாடியவனாக வருகின்றான் தலைவன். அவன் உளத்தை வரைந்து வருதலிற் செலுத்தக் கருதிய தோழி கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/249&oldid=1678988" இலிருந்து மீள்விக்கப்பட்டது