உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

317


கொள்ளை – மிகுதி. மாந்துதல் – நிறையத் தின்னல். கவலை –கவர்த்த நெறி.

விளக்கம் : ‘அழல்போற் செவிய சேவல்' என்றது போலவே, 'ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல்' (அகம். 51) எனப் பிறரும் கூறுவர். செஞ்செவி என்பதையே அழல்போல் என்று உவமித்தனர். வழியின் கொடுமை மிகுதியைச் கூறினதால், அதற்கு அஞ்சினான் என்பது பொருளன்று; அவ்விடத்தே வருந்துமவன் நினைவிலே தலைவி பின் நினைவு உருவெளித்தோற்றமாகத் தோன்ற மனம் மயங்கி இவ்வாறு கூறினான் என்றே கொள்க. 'யாங்கு வந்தனள் கொல் அளியள்' என்பது அதனையே குறிக்கும். ஆழமாக அழுந்திய நினைவுகள் இவ்வாறு உருவெளித் தோற்றமாகத் தோன்றும் என்று கொள்க. 'பதுக்கை' புதைகுழிமேல் குவிக்கப் பெற்றுள்ள கற்குவியல். 'மாண்பு' என்னும் சொல் மூன்று முறை வந்துள்ள செவ்வியையும் இச்செய்யுளிற் காணலாம்.

இறைச்சி : ஆறலைப்போரால் வீழ்த்தப் பெற்றுக்கிடக்கும் பிணங்களைக் கழுகு தின்னாதபடி வெருட்டிவிட்டுத்தானே தின்ற நரியானது, உண்ண நீர் கிடைக்காதும், உறங்க நிழலிடம் கிடைக்காதும் வருந்திற்று என்றனன். அவ்வாறே தலைவனும், தானடைந்த தலைவியை நுகர்ந்து இல்லறமாற்றப் பொருள் தேடி வந்து எய்த்தும் இளைத்தும் பொருள் பெறும் இடம் தோன்றாமல் வருந்துவேன் என்றதாம்.

பாடபேதங்கள் : 1. சிலைமாண் வல்வில், சிலையார் வல்வில். 3. வெம்பலை அருஞ்சுரம், வெம்பரல் அருஞ்சுரம். 10. அளிய வாயின.

பயன் : தலைவன், மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து வழிச்செல்லவியலாதபடி வருந்தினாலும், சென்று செயல் முடித்து விரைந்து திரும்பி வருவான் என்பதாம்.

353. மந்திக்கு விருந்து அயரும்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி ஆற்றாமை அஞ்சித் தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.

[(து-வி.) களவுக் காலத்திலே இரவுக்குறியில் காதலர்கள் சந்தித்து வருகின்ற காலம். தலைவன் அஞ்சாது வருவானாயினும், வழியின் ஏதத்தை நினைந்து தலைவி வருத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/323&oldid=1688191" இலிருந்து மீள்விக்கப்பட்டது