உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

319


சொற்பொருள் : ஆளில் பெண்டிர் – பேணுவாரற்ற மகளிர்; இவரைக் கணவனை இழந்தோர் எனவும் கூறுவர். தாள் – முயற்சி; அது தம் வாழ்வுக்கான பொருள் தேடுதல். நுணங்கு நுண்பனுவல் –நுணங்கும் நுண்மையான பஞ்சு; இது கொட்டை நீக்கிய பஞ்சை அடித்துப் பட்டையிடுதற்கு ஏதுவாக அமைத்தல். கணம் கொள –கூட்டம் கொள்ள. ஆடு மழை – தவழும் மேகம். முடமுதிர் பலா – முடக்கம் பெற்று முதிர்ந்த பலாமரம்; சிறு பெண்கள் எறிக் கனியைச் கொய்வதற்கு எளிதாயிருந்தது முடக்கமே எனலாம். வருவிருந்து – வீட்டுக்கு வந்த விருந்து. அயரல் – உபசரித்தல்; உண்க உண்க என வற்புறுத்தி உண்ணச் செய்தல். காமம் கனிவது – காமமானது முதிர்ந்து நெகிழ்வது. இரும்புலி – வலியபுலி; கரும்புலி, பெரும்புலி எனினும் பொருந்தும்.

உள்ளுறை : 'குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான்தோய் வெற்ப' என்றது, அவ்வாறே நீயும் இவளுடன் மணந்து இல்லறமாற்றும்போது, இவளும் விருந்து பேணியும் நல்லறம் காத்தும் நின் குடிக்குப் பெருமை சேர்ப்பாளாவாள் என்பதாம்.

பசித்து வந்து மந்தி வாய் திறந்து கேட்காதாயினும், அதன் வருகைக் குறிப்பறிந்து குறமகள் பலாக் கனியை உண்ணத் தந்து விருந்தயரும் மலைநாடனாக இருந்தும், நீதான் நின்னோடு பிரியாதுறையும் வாழ்வை விரும்பும், நின் காதலியின் வேட்கை தணிதற்கு, உரியன செய்தாயல்லை என்பதும் ஆம்.

விளக்கம் : 'மணவினை பற்றி நினையாதே கலவையே நாடி வரும் இத்தகைய கொடிய நெஞ்சினனாயிருந்தும், நின் மலைச்சாரலில் மழைமேகம் தவழ்கின்றது; நின்னூர்க் குறமகள் மந்திக்கும் விருந்தயர்வாள்; இதுதான் என்ன பொருத்தமோ?' என்று வியந்து கூறியதும் ஆம்; இதனைப் பொருட்புறத்தே தோன்றும் இறைச்சிப் பொருளாகவும் கொள்ளலாம். சிறு நெறி வருதலானே எம் காமவுணர்வு மேலும் கனிவதேயாயினும், அதுதான் நெடிது நிலைக்கும் இல்வாழ்வாக மலராததால், மலரச்செய்யும் முயற்சியை நீதான் மேற்கொள்ளாததால், நீதான் சான்றோய் அல்லை என்கின்றனளாம். பலாமரம் முடம்பட்டு விளங்குவதை 'முடமுதிர் பலவின் கொழுநிழல்' என அகத்துள்ளும் (91) கூறுவர்.

பயன் : இதனாலே, தலைவன் உள்ளம் மணங்கொண்டு இல்வாழ்தலிலே செல்லும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/325&oldid=1688203" இலிருந்து மீள்விக்கப்பட்டது