உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெ. பொ. மீ.
வெள்ளிவிழாக் குழுவினர்

அணிந்துரை

ஆறு கிளைகளாகப் படர்ந்து, மூவாயிரம் மாணவர்களுக்குக் கல்விப்பயிற்சியாம் தண்ணிழல்தரும் கற்பகத் தருவான சென்னைச் சிந்தாதிரிப்பேட்டைக் கல்விநிலையக்குழுவின் செயலாளராகச் சென்ற இருபத்தைந்தாண்டுகள் தந்நலம் சிறிதும் கருதாது அதனைத் தழைத்து வளரச்செய்துவந்த பேராசிரியர், பல்கலைச்செல்வர். பன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருடைய வெள்ளிவிழா இரண்டாம் மலராக "நற்றிணை நாடகங்கள்" என்ற இந்நூல் தமிழுலகை அணிசெய்ய வெளிவருகிறது. இமயம் முதல் குமரிவரையில் இப்பேராசிரியர் ஆற்றிய சொற்பொழிவுகள் கணக்கிலடங்கா. ஆனால், அவையெல்லாம் காற்றில் கலந்துவானில் ஒன்றாயின. அவ்வப்போது இவர் தமிழ் வெளியீடுகளிலும், ஆங்கில வெளியீடுகளிலும் எழுதிவந்த கட்டுரைகளும் எண்ணிலடங்கா. ஆனால், அவை யெல்லாம் தொகுக்கப்பெறாமல் சிதறுண்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்துப் பல வெளியீடுகளாகத் தமிழுலகிற்கு வழங்கவேண்டும் என்பது எங்கள் பேரவா. இவ்வவாவினை நிறைவேற்றுவதற்குப் பொருள் மிகுதியும் தேவை என்பது சொல்லத் தேவையில்லை. எனினும், எவ்வாறேனும் எங்கள் விருப்பத்தை இவ் வெள்ளிவிழாவில் நிறைவேற்றவேண்டும் என்ற துணிவு கொண்டு, பேராசிரியர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றைத் திரட்டிப் பத்து வெளியீடுகள் வரையில் தொகுத்துள்ளோம். ஆனால், பொருள் முட்டுப்பாடு எங்களைத் திகைக்கவே செய்தது. அப்போது சமய சஞ்சீவியாய்த் தமிழ்வள்ளல், சைவசமயப் புரவலர், உயர்திருவாளர் உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்பச் செட்டியாரவர்கள், எங்களுக்கு ஊக்கம் அளித்துத் தமிழ் நூல்களை அழகாக அச்சிட்டு வெளியிடுவதையே தமிழன்னையின் வழிபாடாகக் கொண்-