உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

ஏற்பாடு செய்கின்றாள். தோழிக்கும் அவன் போவது வருத்தம் தான்: போவது நல்லது என்று அவள் அவனோடு கூடித் துணிந்துவிடுகிறாள். ஆதலால், தோழி முகத்தில், துன்பத்தில் ஓர் இன்பம்—இல்லை—ஓர் ஆறுதல் ஒளிர்கிறது: நிகழ்கால இருளில் எதிர்காலக் காலைச் செவ்வானம் விடிவதனைக் காண்கிறாள். தன் கண்ணான காதலியின் அலறலைக் கேட்டவன் தோழியிடம் வருகிறான். நடையில் ஒரே தயக்கம், துன்பம் நிழலிடும் முகம், சுருங்கிய நெற்றி, ஒளியிழந்து திகைப்பே ததும்பும் கண்-இவ்வாறு காண்கிறாள் தோழி அவனை. "கனவிலும் அலறுகிறாள்; அழுகிறாள்; நடுநடுங்குகிறாள்: எப்படிப் பிரிவது? நீ தான் அவளைத் தேற்றவேண்டும். அவள் முழு மனத்தோடும் உடன்பட்டால் அன்றிப் போவது பெருங் கேடாக முடியும்" என்று பெருமூச்சுவிடுகிறான். "கனவு இல்லை. அவள் உறங்கவே இல்லை" என்று தோழி கூறிக்கொண்டே அவள் படுத்திருந்த அறைக்குள் நுழைகிறாள்.

'சில்' என்ற காற்றுப் பலகணி வழியாகப் படுக்கை அறைக்குள் வீசுகிறது. அங்கு எரிந்துகொண்டிருந்த விளக்குச் சிறிது சாய்ந்து, பின், தூண்டப் பெற்றதுபோல வலமாகச் சுழித்தெழுந்து ஒளிர்கிறது. வெள்ளி, கீழ்வானத்தில் முளைத்தெழுந்து முத்துக் கொத்துப் போல விளங்குவதும் பலகணி வழியே தெரிகிறது. அவள் முகத்தில் ஒளி விழுகிறது. ஆனால், நிழல், முகத்தை மறைப்பதுபோலத் தோன்றுகிறது. வெளியில் மேகம் வெள்ளியை மறைக்கிறதா? இல்லை. உள்ளத்தில் பொங்கி எழும் கவலைதான் நிழலிடுகிறது என்பது தோழிக்கு விளங்கிவிடுகிறது. தோழி, அருகில் வந்து நிற்பதனை அவள் உணர்ந்து விழித்துப்பார்க்கிறாள். "தூங்காமல்

48