உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

233


மிகுதியும் நோவா நிற்கின்றது. யான் இனியும் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

கருத்து : 'பிரிவைப் பொறுத்து ஆற்றியிருக்க இனியும் என்னால் அறவே இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : அடைகரை – யாற்றை அடுத்திருக்கும் கரை. மாஅத்து – மாவினிடத்து. அலங்கு சினை – நெருங்கிய கிளைகள்: அசையும் கிளைகளும் ஆம். பொதும்பு – பூம் பொழில் புகற்சி – விருப்பம். ஓவ மாக்கள் – ஓவியர்கள். துகிலிகை – தூரிகை. தூய் – பஞ்சு.

விளக்கம் : மாப் பூத்துக் கவினுடன் தோன்றுவது இளவேனிற்காலத்து; ஆதலின், தலைவன் அதுகாலை உடனிருக்கும் பேற்றினைப் பெறாத தலைவி பெரிதும் நோகின்றனள். 'செங்கண் கருங்குயிலானது, சேவலொடு கூடியிருந்த போதும், மேலும் கூட்டத்தை விரும்பிக் கூவியழைக்கும் காலம்' என்கின்றது, பிரிந்திருக்கும் தன் மனத்தது வேதனை பெருகும் நிலையினைக் காட்டுதற்காம். அஃதன்றியும், பாதிரிப்பூவினை விற்கும் பூவிலை மடந்தையது குரலைக் கேட்குந்தோறும், அதனைச் சூட்டிக் களிப்பதற்கு இயலாமையினை நினைந்து மனம் மேலும் துன்புறும் என்கின்றனள். இதனால் தலைவியது ஆற்றாமை மிகுதியும் உணரப்படும்.

119. மலையினும் பெரிது!

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து–வி) தலைவியது கூட்டத்தை வேண்டி வந்து ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான் தலைவன். அவனது உள்ளத்தை விரைய வரைந்து கொள்ளுதலிற் செலுத்துதற்குத் தோழி கருதுகின்றாள். அவன் கேட்டு உணருமாறு தனக்குள் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]

தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்
ஆர்தர வந்தனன் ஆயினும், படப்பை
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும் 5
பன்மலர்க் கான்யாற்று உம்பர், கருங்கலைக்

ந.—15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/234&oldid=1690688" இலிருந்து மீள்விக்கப்பட்டது