உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

நற்றிணை தெளிவுரை


காலத்து இரவிலே கரடிகள் பரவிக்கிடக்கும் தன்மை கொண்டதுமான, மலைவழியாகிய நெடிய பாதையூடே நீயும் எம்மை விரும்பியவனாக வருபவனாகின்றனை! அதுதான் என்னையோ?' என்று கூறினையாகப் பலவாக வருந்தி அழுதனையாக இருக்கின்ற, அழகிய மாமை நிறத்தை உடையவளான அரிவையே! கொல்லிமலைச் சாரல் பயன் மிகுந்த பலாமரங்களை மிகுதியாக உடையதாகும். அதன் மேற்குப் புறத்தேயாகத் தெய்வம் இயற்றிவைத்த புதுமையோடு இயலுகின்ற கொல்லிப் பாவையின் உருவம் இருக்கும். அப்பாவையானது கதிரவனின் கதிர்விரிந்து பரவுகின்றதான இளவெயிற் காலத்திலே தோன்றினா லொத்தது நின்னது அழகிய மேனியின் வனப்பாகும். அதனை நினைத்தபடியாக வருகின்ற காலத்தே, எமக்கு மலையினது அடிப்புறத்தே விளங்கும் அவ்வழியே பாதுகாவலாக அமைந்துவிடுகின்றது. ஆதலின் நீதான் வழியின் ஏதத்தைப் பற்றிய நின் கவலையைக் கைவிடுவாயாக!

கருத்து : 'நின் நினைவு எதனையும் எமக்கு எளிதாகச் செய்யும்' என்பதாம்.

சொற்பொருள் : குருதி வேட்கை – இரத்தங் குடிக்கின்ற வேட்கை. உரு – சினம்; பசியினாலே உண்டாயது. வயம் – வலி. முன்பு – ஆற்றல். மழகளிறு -இளங்களிறு. பூழியர் – பூழி நாட்டார்; தமிழ்நாட்டுப் பகுப்புக்களுள் ஒன்று பூழி. துரு – யாடு. மாரி – மாரிக்காலம். எண்கு – கரடி. பூதம் – பூதமாகிய தெய்வம். புதிதியல் பாவை – புதிதான ஆற்றலோடு இயங்கும் பாவை; தன் ஒளியால் பிறரை மயக்கியழிக்கும் சக்தி. ஏமம் – பாதுகாவல்.

விளக்கம் : களிற்றை எதிர்பார்த்திருக்கும் பெரும் புலியும், யாட்டு மந்தைபோலப் பரவிக்கிடக்கும் கரடி மந்தைகளும், மாரிக்காலமும் அம் மலை வழியே வரும் அவனுக்கு ஏதம் தருவதாகுமெனத் தலைவி எண்ணிக் கவலையடைகின்றாள். அவளுக்கு, அவள்பால் அவன் கொண்டுள்ள தெய்வீகக் காதல் அவ்வழியையும் அவனளவிற் காப்புடையதாகச் செய்துவிடுமெனத் தலைவன் கூறி, அவள் கவலையை மாற்றுகின்றான்; அவளை மறந்து தன்னால் இருக்கவியலாத தன்மையையும் கூறுகின்றான்.

இறைச்சி : 'புலி களிற்றைக் கொன்று குருதியுண்பதற்குப் பதுங்கியிருக்கும் காட்டிடையே யாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/375&oldid=1706933" இலிருந்து மீள்விக்கப்பட்டது