உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424

நற்றிணை தெளிவுரை


மதுரை மருதன் இளநாகனார் 21, 39, 103, 194

தொகை நூற்களுள் இவர் பாடியவாகக் காணப்படுவன 79 செய்யுட்கள் ஆகும். மருதனிள நாகனார் எனவும் குறிக்கப் பெற்றிருப்பதும் காணலாம். மதுரைத் திருமருத முன்றுறைப் பகுதியிலே வாழ்ந்தவர். இவரது செய்யுட்கள் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக்கூறுவனவாக உள்ளன. கலித்தொகையுள் மருதக்கலி பற்றிய செழுஞ் சுவைச் செய்யுட்கள் 35-ம் இவராற் செய்யப் பெற்றனவேயாகும். ஐந்திணைச் செய்யுட்களையும் அழகுறவியற்றும் ஆற்றலுடையவர் இவர். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரும் மற்றுஞ் சிலரும் இவராற் பாடப் பெற்றவர்களாவர். இச் செய்யுட்களுள் முல்லை, குறிஞ்சி, பாலை எனும் மூன்றையும் இவர் அறிமுகப்படுத்தும் திறன் பெரிதும் இன்புறற்பாலனவாகும்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ 50

இவர் சேரர் மரபினர்; பாலை பாடிய பெருங் கடுங்கோவின் தம்பி; மருதத்திணைச் செய்யுட்களை நயத்தோடும் பாடுகின்ற சிறப்பினராதலால் இவ்வடை மொழியினைப் பெற்றனர். இவரை இளஞ்சேரல் இரும்பொறை எனக் கொள்வாரும் உளர். அஃதை என்பாளின் தந்தை சோழரைப் பருவூர்ப் பறந்தலைப் போரிலே வெற்றிகொண்ட வரலாற்றை இவரது அகநானூற்றுச் செய்யுளால் (96) அறிகின்றோம். தோழி பாணற்கு வாயின் மறுத்ததாக அமைந்த இச்செய்யுளுள் ஒரு சிறிய ஓரங்க நாடகத்தையே உருவாக்கி இவர் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். 'செறு நரும் விழையும் செம்மலோன்' என்னும் தொடர் மிக நுட்பமான பொருள்நயந் தருகின்றது.

மலையனார் 93

'மல்லற்றம்ம இம் மலைகெழு வெற்பு' என மலைவளத்தைச் சிறப்பித்ததால் இப் பெயரைப் பெற்றனர் என்பர். மலையம் தென்பொதியத்திற்கும் பெயராதலால், அப் பகுதியைச் சார்ந்தவராகவும், கருதுவர். மலையனூர் என்னும் ஊரினராகவும், மலைபோன்ற தோளினர் எனவும் சொல்லலாம். குறிஞ்சித் திணையைச் சார்ந்த இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/425&oldid=1731084" இலிருந்து மீள்விக்கப்பட்டது