பக்கம்:நல்ல தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வாக்கியங்கள் வாக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளுமுன் அவ் வாக்கியங்களைச் செம்மையாக அமைக்க உதவும் குறியீடு களைப் பற்றி அறிந்து கொள்ளுவது அவசியம். தமிழுக்கு மட்டுமன்றி எல்லா மொழிகளுக்குமே இக்குறிகள் அவசியம் தேவை. மொழி கருத்தை விளக்கப் பயன்படுகிறது அன்றோ? அக்கருத்தைச் சொல்லும் முறையில் சொன்னால் அன்றோ விளக்கமாகத் தெரியும்? அவ்வாறு தெளிவான முறையில் சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படு வனவே இக்குறியீடுகள். இவை எல்லா மொழிகளிலும் ஒரே வகையிலேதான் அமைந்துள்ளன. சொல்லில் எடுத்தலும் படுத்தலும் பொருந்தச் சொல்லுவதோடு, அவை பயிலும் வாக்கியங்களிலேயும் இக்குறியீடுகளை அமைத்தே திட்ட மாகத் தத்தம் கருத்தை யாரும் வெளிப்படுத்த முடியும். பேச்சு வழக்கில் அவற்றைப் பிற எழுத்துக்களின் உச்சரிப் பைப் போலக் காட்ட முடியாது என்றாலும், சொல்லும் முறையிலே அவை விளங்குவதோடு எழுதும் போது அவற்றைக் கட்டாயம் இட்டே எழுத வேண்டும். இம்முறை எல்லா மொழிக்கும் பொதுவே. ஒரு வாக்கியம் அல்லது சொற்றொடர் முடிந்துவிட்டது என்றும், அதில் எடுத்த ஒரு பொருள் நிறைவெய்தக் காட்டப்பெற்றது என்றும் எப்படி அறிந்து கொள்ளுவது? வாக்கிய முடிவை அல்லது முற்றைக் காட்டுவதே முற்றுப் புள்ளி. இப்படியே காற்புள்ளி அரைப்புள்ளி, முக்காற்புள்ளி என்ற புள்ளிக் குறியீடுகளும், வினாக் குறி, வியப்புக் குறி, மேற்கோட்குறி போன்ற சிலவும் எம்மொழிக்கும் பொதுவாய் உள்ளன. தமிழில் இந்த நிறுத்துக் குறிகளைக் கால அளவைக்கு ஏற்பவே பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/84&oldid=775207" இலிருந்து மீள்விக்கப்பட்டது