பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கம் 4

காட்சி 1

ஓய்வுகொள்ளும் அழகிய தனி அறையில் மணித் தவிசில் அரசர் வீற்றிருக்கிறார் உணவுண்ட பின். இருதோழியர் மயில் விசிறி கொண்டு விசிறுகிறார்கள். அவர் யாரையோ எதிர்பார்க்கிறார் வழக்கப்படி. வள்ளி வெற்றிலைச் சுருள் தட்டேந்தி அங்கு வருகிறாள். அரசர் கண்ணில் வியப்பு.

அரசர் : அரசியார் எங்கே வள்ளி ? உடல் நலம் குறைவா?

வள்ளி :கணையாழி காணவில்லை. பணிப் பெண்கள் தேடுகிறார்கள் அரசியார் தேடுகிறார் தங்களிடம் மன்னிப்பு வேண்டினார்கள்.

அரசர் : எந்தக் கணையாழி ?

வள்ளி : மாணிக்கக் கணையாழி.

அரசர் : எனவே அரசியார் துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். திருமணத்தில் நான் இட்ட கணையாழி! அரசியாரை மெதுவாக என்னிடம் அழைத்து வந்துவிடு. நான் தேறுதல் கூறுகிறேன். பணிப்பெண்கள் தேடட்டும் போ.

[அவள் போகிறாள்]
[அரசி வருகிறாள். வள்ளியும் வருகிறாள்]

அரசி : உங்களிடம் வைத்த அன்பு குறைந்து விட வில்லை. என் விழியை, என் நினைவை, தங்கள் கணையாழி ஏமாற்றிவிட்டது.