பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நல்வழிச்செல்வம்


ஒருவன் கடல் கடந்து பொருள்தேடி வந்து நல்வாழ்வு வாழ்வதைக் கண்ட மற்றொருவன், தானும் அத்தகைய வாழ்வு வாழ விரும்பி அதற்குரிய வழிகளில், வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் தானும் கடல்கடந்து ஒடித் திரும்பி வருவதால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? இது நன்மக்களின் நகைப்பிற்குரிய செயலாகவே முடியும். (36)

எந்த வகையில் எண்ணிப் பார்த்தாலும், இவ்வுடல் பொல்லாத புழுக்கள் நிறைந்ததாகவே தோன்றுகிறது. அறிஞர்கள் இதனை நன்கு அறிந்திருப்பர். ஆகவே, அவர்கள் தாமரை இலையிலுள்ள தண்ணீரைப்போல இவ்வுடலில் ஒட்டியும், ஒட்டாமலும் வாழ்வாரேயன்றி. இவ்வுடலைச் சிறப்பித்து எவரிடமும் பேசுவதில்லை. (37)

பொருள் சேர்ப்பதற்காகச் செய்யும் முயற்சிகள் எண்ணிறந்தன. ஆயினும், அவை நல்வழியில் செயல் திறனோடு செய்தாலன்றிக் கைகூடாது. என்றாலும், பொருளைத் தேடுவதைவிட மரியாதையை முயன்று தேடுவது நல்லது. ஏனெனில், பொருள் நிலையில்லாதது: மரியாதையோ நிலைத்து நிற்பது. (38)

நீர் நிரம்பி வழியும் ஆறு வற்றிப்போய், அதன் மணல் அடிசுடுகின்ற போதும், அது ஊற்றுப் பெருக்கால் உலக மக்களுக்கு நீரை வழங்கிவரும் அதுபோல், உயர்ந்த மக்கள் தம் செல்வம் வற்றி, வறுமை வந்த காலத்தும், ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் இயன்றவரை எதுவும் வழங்கி மிகிழ்வர். (39)

இறந்து போன மக்களை எண்ணி ஆண்டு ஆண்டு தோறும் அழுதழுது புரண்டு வருந்தினாலும், மாண்டார் ஒரு போதும் திரும்ப வருவதில்லை.நமக்கும் சில நாட்களில் அதே நிலைதான் ஏற்படும். ஆகவே, இவ்வுண்மையை உள்ளத்தே எண்ணி, நல்வழியில் நடந்து, நல்லவைகளைச் செய்து, நன்மக்களுக்கு வழங்கி, உண்டு கவலையற்று வாழ்வதே நலமாகும். (40)