பக்கம்:நாடகத் தமிழ்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 தமக்குப் போதுமான அத்தாட்சியில்லை. இது கடைச் சங்கத்திய நூல் என்று அறிகிறோம். இவையன்றி 'நூல்' என்னும் நாடகத் தமிழ்நூல் ஒன்று முற்காலத்தில் இருந்ததெனக் காலஞ்சென்ற வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் 'தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த தமிழ்மொழிக்குப் பூர்வக் கிரந்தமாகிய தொல்காப்பியமானது இயற்றமிழின் இலக்கணத்தைப் பற்றியே கூறும் நூலாகையால் நாடகத் தமிழைப் பற்றி அது ஒன்றும் கூறவில்லை. ஆயினும் கடகண்டு எனும் ஒரு பழைய நாடக நூலிருந்ததாகத் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் குறிக்கப்பட்டிருக்கிறது. இனி மேற் சொன்ன நாடகத் தமிழ் நூல்களில் நாடகங்களைப் பற்றி நமது முன்னோர்கள் என்ன உரைத்திருக்கின்றனர் என்று ஆராய்வோம். அப்படிச் செய்யப் புகுமுன், நமது முன்னோர் எல்லாவித ஆடல்களுக்கும் 'கூத்து’ என்பதைப் பொதுப் பெயராகவும், 'கதையைத் தழுவிவரும் நாடகம்' என்பதை அதனால் ஒரு பிரிவின் பெயராகவும், ஆண்டிருப்பதை தாம் கவனிக்கவேண்டும். அன்றியும் மேற்சொன்ன நாடக நூல்களெல்லாம், நாடக இலக்கண நூல்களே யொழிய ஒன்ருவது நாடக இலக்கிய நூல் அன்று என்பது இங்கு கவனிக்கற்பாலது. நாடக காப்பியம் என்று சொல்லப்பட்ட சிலப்பதிகாரத்தின் சிறப்புப்பாயிரத்தில் மாதவியைப் பற்றிக் கூறுமிடத்து 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' யென கூறப்பட்டிருக்கிறது; இதற்கு உரையாசிரியர் 'நாடகத்தை ஆடிச் சிறப்பிக்கும் கணிகை” என்று பொருள் கூறியுள்ளார். அரங்கேற்று காதையின் முதலில் இரு வகைக் கூத்து' என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார். இதற்கு அரும்பத உரையாசிரியர், 'தேசி, மார்க்கம் என இவை,’ என்று பொருள் கூறியிருக்கிறார். இதற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுங்கால் இருவகைக் கூத்தாவன-வசைக்கூத்து, புகழ்க் கூத்து; வேத்தியல் பொதுவியல் வரிக்கூத்து; வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து வினோதக்கூத்து; ஆரியம் தமிழ்; இயல்புக்கூத்து தேசிக் கூத்து; எனப் பலவகைய இவை விரிந்த நூல்களிற் காண்க: எனக்கூறி, அதன்மேல் இருவகைக் கூத்தாவன-சாந்தியும் வினோதமும்" என வரைந்துள்ளார். மொத்தத்தில் ஆராயுங்கால், பூர்வகாலத்தில், பொருளதிகாரம் அகப்பொருள் புறப்பொருள், என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டதுபோல், கூத்தானது, அகக்கூத்து புறக்கூத்து என்னும் இரண்டு பெரும் பிரிவினையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/6&oldid=1283140" இலிருந்து மீள்விக்கப்பட்டது