பக்கம்:நாடகத் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தென்றும், மற்றவைகள் இதனுட் பிறந்த பாகுபாடுகள் என்றும் ஒருவாறு ஊகிக்க இடமுண்டு.

இனி மேற் குறிக்கப்பட்ட பல விதமான கூத்துக்களே எடுத்துக் கொண்டு, அவைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் நமது பூர்வீக ஆசிரியர்கள் கூறியதை ஆராய்வதால் அறிவதைக் கருதுவோம்.

அகக்கூத்து என்பது நாயக நாயகி பாவமாய் சிற்றின்பத்தைப் பொருளாக உடைய கூத்து எனவும் புறக்கூத்து என்பது அகத்திலடங்கிய பொருளைத் தவிர, மற்ற விஷயங்களைப்பற்றிய கூத்து எனவும் கூறலாம். அன்றியும் புறக்கூத்து முக்கியமாக வெற்றி அல்லது வீரம் பொருளாக உடையதென அறிகிறோம். அன்றியும் அகக்கூத்து முக்குண சம்பந்தமான நடிப்பு எனவும் கூறப்பட்டிருக்கிறது. இதை அகநாடகம் என்பாறுமுளர்.

அகக்கூத்திற்குரிய உருவுகள் கந்தமுதலாகப் பிரபந்தவுருவீறாக, இருபத்தெட்டென சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். கந்தம் என்பது அடிவரையுறையுடையதாய், ஒரு தாளத்தாற் புணர்ப்பதாம். பிரபந்தமென்பது அடிவரையறையின்றி பல தாளத்தாற் புணர்ப்பதாம். அகக்கூத்தானது தேசி, மார்க்கம் என நமது முன்னேரால் பிரிக்கப்பட்டது எனவும் அறிகிறோம்.

புறக்கூத்து அல்லது புறநாடகங்களுக்குரிய உருவாவன, "தேவபாணி முதலாகஅரங்கொழி செய்யுள் ஈறாகவுள்ள செந்துறை விகற்பங்களெல்லாம்" என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

சாந்திக்கூத்து, இது அகத்தியரால் வகுக்கப்பட்ட பாகுபாடுகளில் ஒன்றாகும். இதற்கு உரையாசிரியர் 'நாயகன் சாந்தமாயாடிய கூத்து சாந்திக் கூத்தெனப்படும்' என்றார். இது முற்காலத்தில் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டதென்றறிகிறோம். அவை சொக்கக் கூத்து, மெய்க்கூத்து, அவிநயக்கூத்து, நாடகக்கூத்து.

சொக்கக்கூத்து, சுத்த நிருத்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அது பாடலுடன் கலவாமலும், அவிநயத்தை தழுவாமலும், யாதேனும் ஒரு கதையைப் பற்றியதாயில்லாமலும், இருத்தல் வேண்டும். இது நூற்றெட்டு கரணமுடைத்து என்று கூறப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/7&oldid=1283193" இலிருந்து மீள்விக்கப்பட்டது