பக்கம்:நாடகத் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அலங்காரம், சயிந்தவ நாடக அலங்காரம், இரணிய நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், சூரபத்ம நாடகம், குசலவ நாடகம், ருக்மாங்கத நாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, முதலியவற்றைக் கூறலாம். இவைகளைப்பற்றி அனுபந்தத்தில் மற்ற விஷயங்களைத் தெரிவித்திருக்கிறேன். இக்காலத்தில் புராணக் கதைகளைத் தழுவாது, பூர்வீக கற்பனைக் கதைகளைத் தழுவிய நாடகங்கள், சில உண்டு; அவை: வீர குமார நாடகம், காத்தவராய நாடகம், மதுரைவீர நாடகம், நல்ல தங்காள் சரித்திரம், அலிபாதுஷா நாடகம், சந்திரஹாச நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்காரருபவதி நாடகம், ஜோகி நாடகம், முதலியனவாம். இவற்றைப்பற்றியும் மற்ற விஷயங்களை அனுபந்தத்தில் கண்டு கொள்க. மேற்கூறிய நாடகங்களில் நாம் முக்கியமாகப் பாராட்டத்தக்கது, நந்தனர் சரித்திரக் கீர்த்தனை என்பதேயாம். இது கீர்த்தனை என்று பெயர்படைத்தபோதிலும் நாடகமே. இது பழைய நாடகங்களைப்போல் வினாயகர் துதி, தோடயம், முதலில் மங்களம், பொதுவசனம் முதலியன உடைத்தாயிருந்தபோதிலும், சொற்சுவை பொருட்சுவையில் மிகவும் அழகும் அருமையும் வாய்ந்தது. இது கோபாலகிருஷ்ண பாரதி என்பவராற் செய்யப்பட்டது. இதிலுள்ள பாடல்கள் தென் இந்தியா முழுவதும் பரவி சாதாரண சங்கீதக் கச்சேரிகளில் மிகவும் உபயோகப்பட்டு வருகின்றன. இந்நாடக ஆசிரியரால் செய்யப்பட்ட மற்றொரு நாடகம் இயற்பகை நாயனார் சரித்திர கீர்த்தனை என்பதாம். இது அச்சிலிருப்பதாகத் தெரியவில்லை ஆயினும் அந்நூலாசிரியருடைய நெருங்கிய பந்து ஒருவர் இதிலுள்ள அநேகம் பாடல்களைப் பாட நான் நேரிற் கேட்டிருக்கிறேன். சொற்சுவை பொருட்சுவையிலும் ராக தாள அமைப்பிலும் நந்தனர் சரித்திரக் கீர்த்தனைக்குப் பிற்பட்டதன்று என்றே கூறவேண்டும். இக்காலத்தில் சில வித்வான்கள் தாங்கள் இயற்றிய நாடகங்களுக்கு நாடகம் என்று பெயர் வைக்காமல் கீர்த்தனை என்று பெயரிட்டது இங்கு கவனிக்கத்தக்கது. முத்துராம முதலியார் என்பவர் தாமியற்றிய நூலுக்கு பாரத கீர்த்தனம் என்றே பெயரிட்டிருக்கின்றனர். இதை நோக்குமிடத்து, நாடகமானது பாமரர்கள் கையிற்பட்டு மிகக் கீழ்ப்பட்ட ஸ்திதியையடைந்தமையால், கவிகளியற்றிய நூல்களுக்கு நாடகம் எனும் பெயரை வைக்காது கீர்த்தனை என்று பெயரிட்டிருக்கலாம் எனும் யோசனைக்கு இடங்கொடுக்கிறது.

தமிழில், இதிகாசப் புராணக் கதைகளையும், மதசம்பந்தமான விஷயங்களையும் தழுவாது, பொதுஜன விஷயத்தைத் தழுவிய நாடகங்களுள் (Social Drama) முற்பட்டது டம்பாச்சாரி விலாசம் எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/62&oldid=1290157" இலிருந்து மீள்விக்கப்பட்டது