பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

நாடக மேடை நினைவுகள்


மெய்யாகுமாக. காலை துயிலெழுந்தது முதல், இரவில் நித்திரைக்குப் போகுமளவும், எங்கள் சௌகர்யங்களை யெல்லாம், நாங்கள் வாய் திறந்து கூறா முன் செய்து வந்தனர். சுருக்கிச் சொல்லுமிடத்து, எங்கள் வீட்டு மருமகப்பிள்ளைக்கும் நான் இவ்வளவு மரியாதை செய்தறியேன். ஒரு சிறு உதாரணத்தையாவது இங்கெடுத்து எழுதா விட்டால், என் மனம் திருப்தியடையாது. நாடக தினங்களில் நாடகமானவுடன், நாங்கள் வேஷம் களையும் வரையும் காத்திருந்து, பிறகு எங்களைத் தங்கள் வண்டியில் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவார்கள்; இதற்குச் சாதாரணமாக இரண்டு மூன்று மணியாகிவிடும்; ராத்திரியில் (அல்லது நான் காலையில் என்று கூறவேண்டுமா?) வீட்டில் எங்களுக்காக வெந்நீர் சித்தமாயிருக்கும். நாங்கள் ஸ்நானம் செய்த பிறகு, எங்களுக்காகப் பிரத்யேகமாகச் சித்தம் செய்யப்பட்டிருக்கும் உணவை (என் நண்பனுக்கு வேறு, எனக்கு வேறு உணவாக) எங்களுடன் உட்கார்ந்து புசித்துவிட்டுப் பிறகு எங்களுடன் உட்கார்ந்து பேசி விட்டு, எங்கள் படுக்கை அறைக்கு அழைத்துக்கொண்டு போய்ப் படுக்கையில் குழந்தைகளைப் படுக்க வைப்பது போல் படுக்க வைத்து, கொசுவலையை மூடிவிட்டு, விடிவிளக்கைச் சரிப்படுத்திவிட்டு, நாளைக்காலை உங்களுக்கு என்ன வேண்டுமென்று விசாரித்து, “குட்நைட், நன்றாய்த் தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டுப் போவார்கள்! நம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினரை இவ்வாறு உபசரிக்க வேண்டுமென்பதை இவர்களிடமிருந்தும், கொழும்பில் ராக்வுட் வம்சத்தாரிடமும்தான் நான் சிறிது கற்றுக்கொண்டேன் என்பது திண்ணம்.

இவர்கள் வீட்டில் நாங்கள் இவ்வாறு தங்கியிருந்த போது, அமலாதித்ய நாடகத்தின் முந்திய தினம் இரவு சாப்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த பொழுது, “நாளை நாடகத்திற்கு உங்களுக்கு ஏதாவது வேண்டியிருக்கிறதா?” என்று சர்.பி. ராமநாதன் இரண்டாவது குமாரராகிய மாஹேசர் என்பவர் கேட்டார். அதன்மீது எனக்கொன்றும் வேண்டியதில்லை என்று நான் தெரிவித்தேன். ரங்கவடிவேலு, “எல்லாம் சரியாயிருக்கிறது. நாடகத்தில் நாலாவது அங்கத்தில் அபலையைத் தூக்கிக்