பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நாடக மேடை நினைவுகள்


வெட்கப்படுவோம் என்பதே. இம்முறை அதெல்லாம் உதவாது என்று அவர் பலவந்தப்படுத்தவே நான் இசைந்தேன். அதன்பேரில் என் தகப்பனார் தானாகக் கடிதங்கள் எழுதி தனது நண்பர்களுக்கெல்லாம் இந்த நாடகத்தின் பகிரங்க ஒத்திகைக்கு வரும்படி டிக்கட்டுகளை அனுப்பினார். அன்றியும் தானாகக் கிட்ட இருந்து நாங்கள் நாடகமாடுவதற்கு ஹாலில், நாடகமேடை சித்தம் செய்து கொடுத்தார். ஒத்திகைக்கு முந்தியதினம், இவ்வாறு எங்களுக்காக மிகுந்த அலைச்சல்படவே வயோதிகரான அவருக்கு (அப்பொழுது அவருக்கு வயது 62) ஜ்வரம் வந்துவிட்டது. அதன் பேரில் இந்த ஒத்திகையும் தான் பார்ப்பதற்கில்லையென்று விசனப்பட, “பெரிதன்று, விக்டோரியா ஹாலில் நாடகம் போடும் பொழுது நீங்கள் பார்க்கலாம்” என்று சொல்லி நான் தேற்றியும், அக்கவலை நீங்கினவர் அன்று. மறுநாள், அதாவது ஒத்திகை தினம் காலை, கொஞ்சம் ஜ்வரம் நீங்கவே, “நான் இரவு வருகிறேன்,” என்று மெல்லக் கூறினார். அதற்கு நான் ஆட்சேபித்து, “இரவில் தூக்கம் இல்லாதபடி விழித்தால் உங்கள் உடம்பிற்கு உதவாது; மறுபடி ஜ்வரம் வந்தாலும் வரும், வேண்டாம்” என்று சொல்லி, ஒருவேளை என்னையறியாதபடி எங்கு வந்து விடுகிறாரோ என்று, அவருக்கு நாங்கள் கொடுத்திருந்த டிக்கட்டை என் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, சாயங் காலம் ஒத்திகை நடக்கும் வீட்டிற்கு வேஷம் போட்டுக் கொள்ளச் சென்றேன்.

இந்த ஒத்திகைக்கு பெஞ்சுகளாலாகிய மேடை ஒன்று நிர்மாணித்தோம். அன்றியும் இரண்டு மூன்று திரைகளும் கிடைத்தன; மிகவும் பழமையான திரைகள். அதில் காட்டுத்திரை ஒன்று மாத்திரம் எனக்கு மிகவும் நன்றாய் ஞாபகம் இருக்கிறது; அக்காட்டுத் திரையின் முக்கால் பாகத்தில் ஒரு பெரும்புலி எழுதப்பட்டிருந்தது! ஆகவே நாங்கள் காட்டு சீனில் வேட்டையாடியபொழுது இந்தப் பெரும் புலியின் பக்கத்தில் நின்று கொண்டு தான் வேட்டையாடினோம்!

நாடகம் பார்ப்பதற்காக ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமாக இடம் ஹாலின் பின்னால் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கத்தினருடைய பந்துக்களாகிய ஸ்திரீகளுக்குச் சுமார் 50. டிக்கட்டுகள் வரையில் கொடுத்திருந்தோம். ஆயினும் ஸ்திரீகள்