பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

59


“உங்களை யார் அவர்களையெல்லாம் பார்க்கச்சொன்னது? அப்படிப் பாராதிருந்தால் இந்தப் பயம் வந்திராதே ‘என்பதுதான். இப்படிக் கூறுவதனால்; நாடகம் பார்க்க வந்திருக்கும் ஜனங்களுக்கு, நடர்கள் தங்கள் பின் பாகத்தைக் காட்டவேண்டும் என்பது என் எண்ணமல்ல. சம்ஸ்கிருத நாடக சாஸ்திரங்களில் அரங்கத்தில் முதுகைக் காட்டக் கூடாதென்று ஒரு நிபந்தனையுண்டு. அது மிகவும் நல்ல நிபந்தனையே. ஜனங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு பேசினால், நீங்கள் பேசுவது அவர்களுக்கு எப்படித் தெளிவாகக் கேட்கும்? ஆகவே நாடகத்தில் தேர்ச்சியடைய வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு நான் கூறுவதென்னவென்றால், அரங்கத்தின் மீதிருக்கும் மற்ற நாடகப் பாத்திரங்களைப் பார்த்துப் பேசவேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர மற்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், எதிரிலிருக்கும் ஜனங்கள்புறம் திரும்பிப் பேச வேண்டி வரும் சமயங்களிலெல்லாம், அவர்கள் தலையளவுக்கு இரண்டு முழம் உயரமாகப் பார்த்துப் பேசுங்கள் என்பதே. இதனால் உங்கள் வார்த்தையும் அவர்களுக்கு நன்றாய்க் கேட்கும்; உங்களுக்கும் அரங்கப் பீதி உண்டாகாது.

அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எனக்கு மிகவும் இளைப்பாயிருந்தபடியால் நேராக என் வீட்டிற்குப் போய்ப் படுத்து விட்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் என் பிதாவைக் கண்டேன். அவர் தான் முந்தியநாள் இரவு பார்த்தது மிகவும் நன்றாயிருந்ததெனக் கூறி, பிறகு, “உன் தாயார் இதைப் பார்ப்பதற்கில்லாமற் போயிற்றே” என்று கூறி கொஞ்சம் விசனப்பட்டார். அதற்கு நான், “அவர்கள் நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், அவர்களிருக்குமிட மிருந்து இவைகளையெல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறார்களென்றே நான் நம்புகிறேன்” என்று பதில் உரைத்தேன். அந்த எண்ணம் இதுவரையில் எனக்குக் கொஞ்சமேனும் மாறவில்லை. இவ்வெண்ணம் இன்னொரு விதத்தில் எனக்கு மிகவும் உபயோகப்படுகிறது; என் மனத்தில் ஏதாவது தவறான எண்ணங்கள் புகும்பொழுதெல்லாம், அவர்கள் இதை அறிவார்களே என்று அஞ்சினவனாய், என் மனத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.