பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

63


போது, வெங்கடகிருஷ்ண நாயுடுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் பார்த்து, எங்கள் நிர்வாக சபையார், சபைக்கு ஏதாவது பொருள் உதவி செய்ய வேண்டுமென்று ஒரு நிருபம் அவருக்கு அனுப்பினார்கள். சில தினங்கள் ஒன்றும் பதில் வரவில்லை.

ஒரு நாள் நான் ஏதோ படித்துக்கொண்டிருந்த பொழுது திடீரென்று, எனது நண்பரிடமிருந்து பாட்சாராம் சாயப் ரூபாய் 200 கொடையளித்ததாகக் காகிதம் வந்தது. அதை கண்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டவனாய், அன்று சாயங்காலம் எனது மற்ற நண்பர்களைச் சந்தித்தபொழுது, இதைக் குதூகலத்துடன் அறிவித்தேன். அவர்களும் சந்தோஷப்பட்டார்கள். உடனே இந்த ரூபாயைக் கொண்டு எங்களுக்கு வேண்டிய உடுப்புகளைத் தைத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். பணத்துடன் நாயுடு தஞ்சாவூரிலிருந்து வந்தவுடன், காலம் போக்காமல் உடனே வேண்டிய வெல்வெட்டுகள் வாங்கி, அக்காலத்தில் நாடகங்களுக்கு உபயோகிக்கப்பட்ட சம்கி (Chamki) உடுப்புகளைத் தைத்தோம். இந்த உடுப்புகளைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறியவேண்டியது அவசியம். அக்காலத்தில் இன்ன நாடகத்தில் இன்ன வேஷதாரிக்கு, காலக்கிரமப்படி, இப்படிபட்ட உடுப்பு இருக்க வேண்டுமென்று நிர்ணயம் கிடையாது. (இப்பொழுதும் பெரும்பாலும் கிடையாதென்றே சொல்லவேண்டும்!) ராஜா உடுப்பு, மந்திரி உடுப்பு, ராஜகுமாரன் உடுப்பு, மந்திரிகுமாரன் உடுப்பு, கொத்தவால் உடுப்பு என்று இம்மாதிரி தான் தைப்பது வழக்கம்; அந்த வழக்கத்தின்படியே நாங்களும் தைத்தோம். இந்த சம்கி உடுப்புகளெல்லாம் வெங்கிட கிருஷ்ண நாயுடுவின் தகப்பனார் வீட்டில், தறிபோட்டுத் தைக்கப்பட்டன. அந்த நாயுடுவின் தந்தை வயோதிகத்தினால் கண்பார்வை ஏறக்குறைய அறவே அற்றவராயினும் அதை வேலையாட்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், வாக்கு சாதுர்யத்தினால் அவர்களிடமிருந்து நன்றாய் வேலை வாங்கிவிடுவார்! இந்த உடுப்புகளைப் பற்றி முதல் முதல் ஒரு குட்டிக்கலகம் பிறந்தது எங்கள் சபையில்; ஆண் வேஷதாரிகளுக்கு மாத்திரம் இவைகளையெல்லாம் தைத்துக் கொள்கிறீர்களே, எங்களுக்கு ஒன்றுமில்லையா என்று ஸ்திரீ வேஷதாரிகள் முறையிட்டனர்! அதன் மீது அவர்களுக்காக