பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

81


அப்புகழ்ச்சிக்குத் தக்க பாத்திரமானோமா என்று நாங்கள் கருதவில்லை.

இவ்விருவரில் ஒருவர் (அவர் பெயர் எனக்கு ஞாபகமில்லை) நாடகம் நடக்கும்பொழுது, இடையில் அரங்கத்திற்கு வந்து என்னைச் சந்தித்து “கிரீன் ரூம்” எங்கே என்று கேட்டார். அக்காலத்தில் அச்சொற்றொடரின் அர்த்தம் எனக்குத் தெரியாதிருந்தது! ஆகவே இங்கே கிரீன் ரூம் என்பது கிடையாது என்று பதில் உரைத்தேன். அவர், என்ன மூடனாயிருக்கிறான் இவன் என்றே என்னைப்பற்றி எண்ணியிருக்க வேண்டும். வாஸ்தவத்தில், கிரீன் ரூம் என்றால் ஆக்டர்கள் வேஷம் தரிக்கும் இடம் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்கிருதத்தில் இதற்கு நேபத்யம் என்று பெயர்.

என் அபிப்பிராயம் முதல் நாடகத்தைவிட, இந்நாடகத்தில் நாங்கள் எல்லோரும் நன்றாய் நடித்தோம் என்பது; இரண்டு நாடகங்களையும் பார்த்தவர்களில் பெரும்பாலர் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக அறிந்தேன்.

நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களில் பெரும்பாலர், நாடக மேடையிலேயே, கொஞ்சநேரம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்து அப்படியே தூங்கிவிட்டோம். மறுநாள் காலைதான் வீட்டிற்குப் போனோம். மறுநாள் சாயங்காலம், அதாவது ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், ஆக்டர்கள், மெம்பர்கள் எல்லோரும் சபையின் ஸ்தலத்தில், ஒருங்கு சேர்ந்தோம். இரண்டாவது நாடகத்தில், நாங்களெல்லாம் நன்றாக நடித்தோ மென்கிற சந்தோஷத்தாலே, மிகவும் குதூஹலத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டோம்! அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கண்டக்டராகிய திருமலைப்பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். அவரும் நாங்கள் இந்த இரண்டாவது நாடகத்தில் சரியாக நடித்ததாகக் கூறிச் சந்தோஷப்பட்டார். அதன்பேரில், நாங்களெல்லோரும் சேர்ந்து, அப்படி “உங்கள் மனத்தைத் திருப்தி செய்ததற்காக, எங்களுக்கெல்லாம் ஏதாவது மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும்!” என்று நிர்ப்பந்தித்தோம். அவரும் சந்தோஷமாய் உடன்பட்டு உடனே இரண்டு ரூபாய்க்குப் பகோடா வாங்கி வரச் சொல்லி எங்கள் எல்லோருக்கும் வழங்கினார்.