பக்கம்:நாடும் ஏடும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களைப்பால் கால்வாய் ஓரங்களிலே களைப்பாறும்போதும் இரயிலிலே பிரயாணம் செய்யும்போதும் மற்றும் பலப்பல காலங்களிலும் சிந்தித்திருக்கின்றேன்; சிந்தித்து வருகிறேன். பல நாட்கள் தூக்கம் வராமல் துன்பப்பட்டுமிருக்கிறேன் இந்த நாட்டு ஏடுகளில் காணும் கவின் பெறும் காட்சிகளை நாட்டிலே ஏன் காணமுடியவில்லை? காணப்படாததற்குக் காரணம் என்ன? என்பன பற்றித் துருவித்துருவி ஆராய்ந்து ஆயாசமடைந்த காலமுமுண்டு. இந்த நாடு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏமாளித்தனம் மிகக்கொண்டு இருப்பதே அடிப்படையான காரணமாகலாமோ வென ஐயுற்றகாலமு முண்டு.

நான், நம் நாட்டு ஏடுகளிலே படித்திருக்கின்றேன் நம் நாடு நன்செய்யாலும் புன்செய்யாலும் நாற்புறமும் சூழப்பட்டதென்று நாடெங்கும் செந்நெல்லும் செங்கரும்பும் மற்றும் பல விளை பொருள்களும் மலிந்து கிடக்குமென்று. ஆனால் ஊரிலே, நாட்டிலே, நகரிலே நாம் காணுவது நேர் மாறான காட்சிகள். படிப்பது பசிப்பிணி யறியா மக்கள். பார்ப்பது பசியால் மிகநொந்து மெலிந்து வாடி வதங்கும் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகள். ஏட்டில் காண்பது கண்ணுக்கினிய காட்சி தரும் கூடகோபுர மாடமாளிகைகள்; அலங்காரமான ஆபரண வகைகள் ; இன்ன பிறவற்றை இன்பம் நுகரும் மக்கள். ஆனால் கண்ணால் காண்பது காதால் கேட்பது யாவும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கும் பரிதாப நிலைமை. நீர் நிலவளம் மிகுந்த செல்வமுடைத்தாய்ச் சீர்பெற்றிலங்கும் நாடு என ஏட்டிலே நவிலப்படும் நாட்டிலே ஏன் இந்தத் தோற்றங்கள்; எண்ண முடியாத ஏழைமக்கள் ; பசிக்கு உணவில்லாத பச்சிளங் குழந்தைகள் என்று கேட்கின்றேன்.

ஏன் பல இலட்சக்கணக்கானவர் சிங்கப்பூர், மலாய் நெட்டால் முதலிய நாடுகட்குத் தத்தம் பெண்டுபிள்ளைகளோடும் தன்னந்தனியராகவும் தாம் பிறந்த நாட்டைவிட்டு அல்லல்பட்டு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி கிடைக்காதா என்று வாட்டத்தோடு போகின்றனர்? இறைவனைப் பாடும் இலக்கிய கர்த்தாக்கள், பகலவனைப் பாடும் பண்டிதர்-

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/21&oldid=1547540" இலிருந்து மீள்விக்கப்பட்டது