பக்கம்:நாடும் ஏடும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள், காதலைப் பாடும் கலைவாணர்கள், இயற்கை எழிலையும் நட்பின் மேன்மையை நாடறியச் செய்யும் நாவலர்கள், பண்டைப் பெருமையைப் பாடும் புலவர் குழாங்கள், பரமன் திருவிளையாடலைத் திருத்தமாகப் பதிப்பிக்கும் திருக்கூட்டத்தார்கள் அய்யன் உலா அம்மை அந்தாதி பாடி எல்லாம் வல்ல எம்பெருமானை ஏத்தியேத்தித் தொழும் பணியிலேயே ஈடுபட்டு "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்" என்ற அடியை இழைத்து இழைத்துப் பாடிச் சுவைக்கும் பக்திமான்கள் மற்று எவராவது இந்த நாட்டிலே செல்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக்கோயில்கள் எழுப்பப்பட்டு அன்றாட ஆறுகால பூசை தவறாது நடந்துவர அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக்கிடக்க, இத்தனை குடும்பங்கள் மண்ணோடு மண்ணாய்ப் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சில் ஈரம் இருந்து கைவைத்துச் சொல்லத் துணிவுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா?

பாடிப் பாரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா? வறுமையை நீக்க வழி கோலினதுண்டா? வறுமை தாண்டவமாட, நாடு நலிந்துகொண்டே போக அடிமைத் தளை அழுந்திக்கொண்டே செல்ல, பழமையைப் பிடித்துக்கொண்டு, மக்கள் பக்குவமடைய, மனோ உறுதிகொண்டு வாழ்க்கையில் வழுக்காது விழிப்போடு செல்லச் சமுதாயத்தொண்டு செய்யும் ஏடுகள் தேவையாகும் நேரத்திலே, இதிகாச புராணங்களைப் பிடித்துக்கொண்டு அல்லியரசாணி மாலை பாடிக்கொண்டு, கம்பன் காவியரசனையில் கருத்தைச் செலுத்திக்கொண்டு மதத்திற்கு மாசுவரா வகையிலே, ஆண்டவன் லீலையை அப்பழுக்கின்றி உள்ளதுள்ளபடி, நவிலும் நல்லெண்ணம் ஒன்றைமட்டும் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, காலத்திற்கும் கருத்திற்கும், நிலைமைக்கும், சுற்றுமுள்ள சூழ் நிலைக்கும் ஏற்ப ஏடுகளை உண்டாக்காது மகிமையில் கண்மூடி மோகம்கொண்டு இனத்தை இழிவு செய்யும் இலக்கிய ஏடுகளை ஏத்தி ஏத்திக் தொழும் இலக்கிய வீரர்களே! உங்கள் கடமை இதுவா? இது முறையா? அடுக்குமா? என்றும் நிலைக்குமா இந்த நீதி? நீங்கள் சிந்தி-

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/22&oldid=1547541" இலிருந்து மீள்விக்கப்பட்டது