பக்கம்:நாடும் ஏடும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமர்த்தினார். அத்துடன் விட்டாரா? அம்மந்திரிமார்களின் பத்தினிகளையும் இவைகளுக்குப் பத்தினிமார்களாக அமைத்தார் என்று திருவிளையாடல் புராணம் செப்புகின்றது. இது நாடறிந்த உண்மை தகுமா? முறையா? அறிஞர் ஆற்றும் அறமா? ஆண்டவன் செய்யும் அற்புதமா? ஆபாச வேலையா? அக்கிரமமா? மக்களை மடையராக்கும் வழியல்லவா? இதனைப் பாடும் ஏடும் வேண்டுமா நமக்கு? இதனால் யாது பயன் நாட்டுக்கு நவிலுங்கள் நாட்டின் எதிர் காலப் பெரியோர்களே!

கடவுள் திருடுகிறார்

பிறிதொரு கடவுள் அவதாரமான கண்ணன் சிறு வயதிலே வெண்ணெய் திருடுகிறான். சற்றுப் பெரியவனான பிறகு பெண்கள் குளிக்குங்கால் அவர் தம் சேலைகளைத் திருடுகிறான், பின்னர் கோபிகளோடு பற்பல லீலைகள் செய்கின்றான். அர்ச்சுனனுக்கு அழகிய அணங்குகள் அநேகரைக் கூட்டி வைக்கின்றான். பாரத யுத்தத்திலே சிறந்த ராஜதந்திரத்தைக் கையாள்கிறான். "நாலு வருணங்களைப் படைத்தவன் நான் தான் என்று கீதை செய்கிறான். இத்தகைய கடவுளரை ஆதாரமாகக் கொண்டு ஒழுகினால் நம் மக்கள் மாண்புறும் காலம் என்றோ? மதிபெறும் காலம் காணக் கிடைக்குமா? அன்றி அறிவால் ஆராய்ந்து அறமெனப் பட்டதைத் துணைகொண்டு செல்வது நேர்மையா? செப்புங்கள் எதிர்காலச் செம்மல்களே!

மதத்தால் மயங்கிய மன்னவன்

கடவுளரின் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஏடுகளினின்று எடுத்து காட்டப் புகின் அஃது ஓர் எல்லைக்குட்படாது நீண்டு செல்லும். மதமானது சிறந்த இலக்கியங்களூடே செறிந்து விளங்குவதால் மதியிழந்த மன்னர்கள் எத்துணையர், எத்துணை அறிஞன் பணி நாட்டு நலன் கருதாமல் நாசமாயிற்று.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/31&oldid=1547548" இலிருந்து மீள்விக்கப்பட்டது