பக்கம்:நாடும் ஏடும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தகைய ஏடுகள் மதியை வெருட்டி மனதை விதியில் இருத்தி மக்கள் அறிவை மயக்கி, ஆண்டவன் அருளால் அனைத்தையும் அரைக்கணத்தில் பெறலாம் என்ற ஆசையைக் கிளப்பி மக்கள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முழு மூடர்களாக்குகின்றன. அதுவுமன்றி நாம் இலக்கியங்களிலே, ஏடுகளிலே மதத்தைப் புகுத்தி ஆண்டவன் திருவிளையாடல்கள் என்றும், அவதாரங்கள் என்றும் அறிவுக்குப் பொருந்தாதவற்றைக் கூறி கடவுளருக்குக் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஆபாச ஆசாரங்களையும் ஏற்றி ஏளனத்திற்குள்ளாக்குகின்றோம். கடவுளை மதிகெட்டவனாகக் காட்டுகின்றோம். இவைகளைத் தவிர வேறு ஏடுகளை இக்கால இலக்கியப் பண்டிதர்கள் ஏன் செய்து தரலாகாது?

தற்கால இலக்கிய கர்த்தாக்கள்

நமது சேதுப்பிள்ளையவர்கள் எழுதுவது "வேலும் வில்லும்' அதற்கு அடுத்தாப்போன்று சேதுப்பிள்ளையவர்கள் தம் தூவிலே கம்பராமாயணத்தையும் கந்த புராணத்தையும் சரிவரக் கையாளவில்லை என்று வேறு நூல் ஒருவர் இயற்றுவர். சோமசுந்தர பாரதியாரின் ஏடு "தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்" என்பது. திரு. வி. க. வின் ஏடு பெரிய புராணத்திற்குப் புத்துரை. மறைமலையடிகளார் நூல் "மாணிக்க வாசகர் கால ஆராய்ச்சி" பிறிதொரு புலவர் இயற்றுவார் இதிகாசங்களிலே காணும் நீதிகள் என்று. இவ்விதம் பழைய பத்தாம் பசலியையே திரும்பத் திரும்ப வெவ்வேறு நடையில் கொண்டு வருவதால் நாட்டுக்கு வரும் நன்மை என்ன? நன்கு சிந்தியுங்கள். அறிவு கொண்டு ஆராயுங்கள் கலை பயிலுங் காளைகளே!

நமது தற்காலப் புலவர்கள் பண்டைத் தமிழ் மன்னர்கள் வீரத்தை விளக்குங் கவிதைகளை ஏன் பாடக்கூடாது? செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையையும், ஆரிய மன்னரான கனக விசயரைப்

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/33&oldid=1547551" இலிருந்து மீள்விக்கப்பட்டது