பக்கம்:நாடும் ஏடும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரில் வென்ற வீரத்தையும் அவர்தம் முடியினிலே கண்ணகி சிலைக்குக் கல்தூக்கி வரச்செய்த பெருமையையும்பற்றி ஏன் ஒரு பரணி பாடக்கூடாது? ஏன் கடாரம் வென்ற தமிழரசர்களைப்பற்றி ஓர் காவியம் இயற்றக்கூடாது? பர்மா வென்ற பராந்தகனைப்பற்றி ஏன் ஒரு புகழ்மாலை இயற்றக்கூடாது, அறிவுபற்றியும். ஆராய்ச்சியின் மேன்மைபற்றியும் அன்றாட வாழ்க்கை வளம்பற்றியும் பலப்பல ஏடுகள் ஏன் எழுதக்கூடாது? இவர்களால் முடியாதா? முடிக்கும் ஆற்றலில்லையா? முடியும். ஆனால் முயலுவது கிடையாது. அவர்கள் இத்தகைய நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பூட்டும் பெரும் பணியிலே சிந்தை செலுத்தினால் நாடு நாளடைவில் புத்துணர்ச்சி பெற்றுப் புதுவாழ்வு பெறும். பாடவேண்டுமென்றால் பரமன் திருவிளையாடல்களும், பூஞ்சோலைகளும், கோயில்களும் ஸ்தல மகிமைகளுந்தான் கிடைக்கின்றனவா? அன்றாட கஞ்சிக்கு அலையும் தோழனைப்பற்றி உள்ளமுருகப் பாடிப் படிப்பவர் மனதில் இரக்கமுண்டு பண்ணலாமே. நாட்டிலே உள்ள செல்வம் ஒரு சிலருக்கு மட்டும் பயன்பட்டு, பலருக்குப்பயன்படாது, கோயில்களிலும், மடங்களிலும், ஜமீன்தார்களிடையும் முடங்கிக் கிடப்பதை ஊரறியச் செய்யலாகாதா? நாட்டிலே ஆண்டி - அரசன், ஏழை - பணக்காரன், பறையன் - பார்ப்பான் என்ற மாறுபாடுகளின் இழிதன்மைகளை ஏடுகளின் மூலம் எடுத்தியம்பி மக்களிடை மறுமலர்ச்சிக்கான கிளர்ச்சி உண்டுபண்ணலாகாதா?

இவைகளை விடுத்து பக்தனைப் பரிசோதிக்க மனைவியையும், பிள்ளைக் கறியையும் கேட்கும் புண்மைக் குணத்தைக் கடவுளர்க்கு ஏற்றி அதனைப் பாடுவதால் நாட்டிற்கு நன்மை யாதும் உளதோ? இவைகள் நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்திற்கு ஈர்த்துச் செல்லவில்லையா? இதனை முதன் மந்திரி சர்ச்சில் கேள்விப்படின் நமக்கு கி. பி. 2045-லாகிலும் சுதந்திரம் வழங்க எண்ணங் கொள்வாரா?

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/34&oldid=1547552" இலிருந்து மீள்விக்கப்பட்டது