பக்கம்:நாடும் ஏடும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

றாயே, அந்தச் சமத்துவம் இன்று நாட்டிலே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் சல்லிக்காசு பெறுமான அளவுகூட அகப்படவில்லையே, பழமை வீரம் பேசுவது பயனளிக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள்! நாட்டுக்கு நலம் தருமா? பயனளிக்காது என்பதில் பிழையில்லை. தராது என்பதில் தப்பிதமில்லை; இதனால் தமிழனின் மானம் பறி போகிற தென்பதற்கோர் தடையில்லை.

எது தன்மான உணர்ச்சி?

எடுத்துக்காட்டாக, கூடகோபுரம் போன்ற மாடமாளிகையிலே. மக்களோடு மாண்புற வாழ்ந்த மனிதன் ஒருவன், கால நிலைமையாலோ கருத்தழிவினாலோ, கர்வத்தாலோ, கயமைத்தனத்தாலோ பிறரின் படுமோசத்தாலோ வறிஞனானான் என வைத்துக் கொள்வோம். அவனது மாட மாளிகை மாற்றானுக்கு உரிமையாய் விட்டது, சிலகாலம் சென்றபின் அவ்வறியனான முன்னாள்செல்வன் தன் நண்பன் ஒருவனோடு அவ்வீதி வழியே செல்லப் புறப்படுங்கால் அவனது மானம் அவனை அவ்வீதி வழியில் காலெடுத்து வைக்கவிடாது. அவன் தன்மானமுடையவனாயிருந்தால். தவறி அவ்வழி புக நேரினும் அவ்வீட்டை ஏறெடுத்துப் பாரான். தன்மானமுள்ளோன் தன் நண்பன் அம்மனையின் மாண்பைக் குறித்துப் பேசினும் தலை கவிழ்வான். மனையைப் பார்க்க மனமில்லாததால் நண்பன் அதுபற்றி அவனோடு உரையாடப் புகினும் இரண்டொரு சொற்களால் தன்னிலையை உணர்த்தாது உணர்த்தி வேறு போக்கிலே உரையாடலைத் திருப்பி அவ்விடம் விட்டு விரைவிலே நகர்வான். அதுதான் மனிதனின் தன்மான உணர்ச்சி; அது ஒவ்வொரு உயிருக்கும் வேண்டும் மிக இன்றியமையாததுகூட. ஆனால் தன்மானமற்ற தன்மையாளன் தூரத்தே வரும்பொழுதே, நண்பன் வேறுவழி செல்லப்புகினும் தடுத்து, "நமது மனை மகா நேர்த்தியானது இதோ இந்த வீதியில்தான் உள்ளது பார்த்துப் போகலாம் வா, ஆகா! அதன் அழகே அழகு. அதனை வைத்து அநுபவிக்கக் கொடுத்து வைக்க வேண்டும்; சுற்றிலும் பூங்காவென்ன; நடுவே நடுவே-

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/43&oldid=1547561" இலிருந்து மீள்விக்கப்பட்டது