பக்கம்:நாடும் ஏடும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழமை பாழாகும் என்பதைக் காலப்போக்கு அவர்களுக்கு எடுத்துக் காட்டும்; ஆராய்ச்சிக்கு முதலிடம் தாருங்கள் பண்டிதர்களே.

எச்சரிக்கை!

பண்டிதர்களே! புலவர்களே! நாவலர்களே! இலக்கிய கர்த்தாக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! சிந்தியுங்கள் என்பதுதான் அது. அறிவோடு சிந்தியுங்கள்! நடுநிலை நின்று எண்ணுங்கள்! ஏடுகளைப் பாருங்கள் எத்துணை வேறுபாடுகள் உள்ளனவென்று, ஏடுகளால் நாட்டிற்கு விளைந்த நன்மையைக் கணக்கெடுத்துப் பாருங்கள்; பார்த்து சிந்தித்து சீர்தூக்கி நல்ல முடிவுக்கு வாருங்கள். அதன் வழி நடவுங்கள்: பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்; காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த இலக்கியங்களை இயற்றுங்கள் இன்றேல் உங்கள் காலம் பழைய புராணங்களோடு நிற்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை செய்கின்றேன். எச்சரிக்கையை கோமாளியின் கூத்தென்று ஏமாளித்தனமாக எண்ணாதீர்; நிலைமை நிச்சயம் மாறும் என்பதைப் பற்பல நாட்டு வரலாறுகளைப் படித்துப் பார்க்கின் உணரலாம்; காலம் அறிந்து கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்; நிலைமையறிந்து நீதி வழங்குங்கள்; நாட்டையறிந்து ஏடுகள் இயற்றுங்கள்; மதத்தைப் புகுத்தி கலையைக் கறைப்படுத்தும் கயமைத்தனத்தைக் கைவிடுங்கள்; அதனால் மக்களை மக்களாக வாழச் செய்வீர்கள்; மற்று நிர்வாணப் பிச்சை கேட்கும் ஆண்டவனைப் பாடின் மக்களை நிர்வாண காலமாகிய காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் இழிசெயல் புரிந்தோராவீர்; மக்கள் மதியைக் குறைத்த குறைமதியாளராவீர்.

மதத்திற்கென தனி ஏடு இயற்றுங்கள் மதம் வேண்டுமேல், அழகான கதைகளிலே, ஆராய்ச்சி மிக்க ஏடுகளிலே ஆண்டவன் அவதார லீலைகளைப் புகுத்தி அறிவைப் பாழ்படுத்தாதீர். அது அறமல்ல. அறிவுடமையு மல்ல ஆராய்ச்சிக்கு அணை போடாதீர். ஆண்டவனுக்குரிய ஏடுகள்

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/47&oldid=1547565" இலிருந்து மீள்விக்கப்பட்டது