பக்கம்:நான்மணிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நான்மணிகள்

 இறைச்சியை உண்டு இன்புறும் புலி; புல்லை உண்டு இன்புறும் பசு, சோற்றை உண்டு மகிழ்வர் கீழோர்; அறிவை உண்டு மகிழ்வர் அறிஞர். (66)

தொடங்கியபின் துன்பத்தினை அடைவர் ஆராய்ச்சி யற்றோர்; தொடங்குமுன் எண்ணிச் செய்பவர் ஆராய்ச்சியாளர்; விரும்பியவற்றை அடைந்து மகிழ்பவர் பற்று மிகுந்தோர்; வீணாகாதவற்றைச் செய்து மகிழ்வர் பற்று அற்றோர். (67)

இருந்தும் பயனடையாதவரைவிட இல்லாதவர் நல்லவர்: வைத்து இழப்பவரைவிட வறுமையாளர் நல்லவர்; சினந்து வைபவரைவிடப் பொறுப்பவர் நல்லவர்: நன்மை செய்பவரை விட நன்றியை மறவாதவர் நல்லவர். (68)

தந்தையின் தன்மையை மகனால் அறியலாம்; நெஞ்சத்து உள்ளத்தை முகத்தால் அறியலாம்: உழைப்பின் சிறப்பை விளைவால் அறியலாம்: நிலத்தின் இயல்பை மழையால் அறியலாம். (69)

ஊர் நல்லது ஒற்றுமை கொண்டிருத்தால், அறிவு நல்லது குற்றமறக் கற்றிருந்தால், ஆனிரை நல்லது காளைகள் சிறந்திருந்தால்; வாழ்வு நல்லது வழங்கி உண்டு வந்தால். (70)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/34&oldid=1379912" இலிருந்து மீள்விக்கப்பட்டது