பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



கோடுகள் தெரிந்தன; அவை நெடுஞ்சாலைகள். அவற்றின்மேல் ஒடும் கார்கள் சிறு பொம்மைகளாகக் காட்சியளித்தன.

இதற்குள் சாப்பாட்டு வேளையாகிவிட்டது. விமானப் பணிப்பெண் ஒவ்வொருவர் இடத்திற்கும் வந்து, இணைப்பு மேசையை நாற்காலியோடு பொருத்திவிட்டுப் போனர். பின்னர் உணவு பரிமாறப்பட்டது. மரக்கறி உணவு போதிய அளவு கிடைத்தது. எல்லாவற்றையும் தனித்தனிப் பாத்திரத்தில் பரிமாறி, ஒருதட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுத்தார். தட்டில் இருந்த கத்தி, கரண்டி, முள் இவற்றின் துணையால் உணவு முடிந்தது. தட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இணைப்பு மேசை கழற்றப்பட்டது.

உண்ட களைப்புத் தொண்டருக்கும் உண்டல்லவா? சாய்வு நாற்காலியில் கண் அயர்ந்துவிட்டேன். விழித்துப் பார்த்தபோது, கீழே ஒரே மலை மயம்! மலைகளுக்கு ஊடே எங்கோ இரண்டொரு ஊர்கள் தெரிந்தன. இடை இடையே, நீலக் கோடுகள்; அவை மலையாறுகள்! இப்படி நெடுந் தாரம், பின்னர் சமவெளி. அச் சமவெளியில் நீல வளைவுகள்; நீல நேர்க்கோடுகள். அவற்றின் கரையில் பரந்த பசுந்தரைகள் பல. ஆறுகள், நீல வளைவுகளாகத் தோன்றின. வெட்டிய வாய்க்கால்கள் நீலக் கோடுகளாக இருந்தன. பரந்த பண்ணைகளெல்லாம் பசுந்தரைகளாகத் தோன்றின. சிறிது நேரம் சென்றது. நெடுஞ்சாலைகள் தெரிந்தன. அவற்றில் இங்கொன்றும் அங்கொன்றுமாக லாரிகள் நடமாடின.