பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திறந்த வெளியல், காற்றுமழையில் 200 மீட்டர் நடக்கத் திண்டாடிவிட்டோம். ஊசி மழை வீசியதால் முகம் வலித்தது. விரல்களெல்லாம் மரத்துத் விட்டன. நிலையத்தைச் சேர்ந்தபின் இரண்டொரு நிமிடங்கள் அப்படியே நீடித்து இருந்து, பின்னர் நன்னிலைக்கு வந்தன
எங்களை வரவேற்க, இரஷியக் குடியரசின் பள்ளிகளின் தலைவரும், அவருக்குத் துணையாக இரு அதிகாரிகளும், ஒரு மொழிபெயர்ப்பாளரும் வந்திருந்தார்கள். அவர்கள் ஆர்வத்தோடு வரவேற்றார்கள். விமானத்திலிருந்து இறக்கப்பட்ட எங்கள் பெட்டி பேழைகளைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
இதற்கிடையில் மணியைப் பார்த்தோம். கிட்டத்தட்ட, டாஸ்கண்டில் புறப்பட்ட மணி நேரமே, மாஸ்கோவில் உள்ள கடிகாரம் காட்டுவதைக் கண்டு வியந்தோம். வியக்க வேண்டா. டாஸ்கண்டிற்கும் மாஸ்கோவிற்கும் சுமார் மூன்று மணி கால அளவு வேற்றுமை. டாஸ்கண்டிற்கு மேற்கே மாஸ்கோ. முந்திய ஊரில் பத்து மணியாக இருக்கும்போது இங்கு ஏழு மணியாக இருக்கும். இது பூகோள உண்மை என்று விளக்கினர் பள்ளிகளின் தலைவர்.
அப்படியா ; ஏட்டிலே படித்ததை இன்று வாழ்க்கையிலே அனுபவிக்கிறோம் மூன்று மணி நேர வேற்றுமையிருக்கும் அளவு நெடுந்துாரத்திலா இருக்கிறது இவ்விரு நகர்களும்? என்று வினவினோம்