பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

இருந்தார் ; அடுத்து நான் ; அப்புறம் திரு. இராஜா ராய் சிங். இதுவே எங்கள் வரிசை. மொழி பெயர்ப்பாளரான அம்மையார், ஒரு 5 'கொபெக்' நாணயத்தை இயந்திரத்தின் துவாரத்தில் இட்டார்; 'கொபெக்'கின் மதிப்பு 5 புதுக்காசுகள். கட்டை உயர்ந்தது. 'உள்ளே போங்கள் கன்னா' என்றார் அவர். குமாரி கன்னா, கட்டையைக் கடந்து போய்விட்டார். கட்டை பழைய நிலைக்கு இறங்கிவிட்டது. இதைக் கவனிக்கவில்லை நான். இயந்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது 5 கொபெக் நாணயத்தைத் துவாரத்தில் இட்டார், உள்ளே போங்கள் வேலு என்றார். 'போகிறேன். டிக்கட்டைக் கொடுங்கள்!’ என்று கையை நீட்டினேன்.
டிக்கட் கிடையாது ; விரைந்து போங்கள்' என்றார். ஒரடி முன்னே வைத்தேன். இதற்குள், கட்டை கீழே இறங்கி என்னைத் தடுத்துவிட்டது. உள்ளே போக முடியவில்லை.
"ஏன் இத்தடை?".
"நாணயம் உள்ளே போனதும் கட்டை வழி விலகும். இரண்டொரு நொடிப்பொழுதே இப்பலன். விரைந்து போகாமல் தயங்கினால், உரிய காலத்தில் கீழே இறங்கிவிடும். பரவாயில்லை. கவலைப்படாதீர்கள் இம் முறை, நாணயத்தை இட்டதும் சட்டென்று உள்ளே போய்விடுங்கள் என்றார். அப்படியே விரைந்தேன். அடுத்து, இராஜாராய் சிங். அப்புறம் மொழிபெயர்ப்பாளர்.