பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அறிவென்றால் என்ன? உணர்வென்றால் என்ன என ஆரம்பித்து, முக்கால் மணி நேரம் ஈடுஇணையற்ற ஒரு முடிவுரையாற்றி நிறைத்தார்.

அடுத்துப் பேசவேண்டியவர் தெலுங்கர். அவரிடம் திரும்பிய இராஜாஜி “எல்லாம் நிறைவாயிருக்கு இதுக்கு மேல. நீங்க என்ன பேசப்போறீங்க வேண்டாமே” என்றார். அவரும் “சரி” என்று ஒத்துக்கொண்டார். கூட்டம் முடிந்தது.

இராஜாஜிக்கும் எனக்கும் நடந்த உரையாடலின் அடிப்படையை இப்பொழுது சொல்லுகிறேன். இராஜாஜி முதல்வராக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக நடைபெற்றது. பச்சயைப்பன் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்த T.L. திருஞானசம்பந்தம் என்பவர் ஒரு பெரிய மண் சட்டியில் மலத்தைக் கரைத்து இராஜாஜி வீட்டு வாசலில் உடைத்து விட்டார். அந்த ஆள் நானாக இருக்குமோ என்று இராஜாஜிக்குச் சந்தேகம். T.L.திருஞானசம்பந்தம் என்பது இராஜாஜியின் நினைவில் இருந்ததுபோலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் T.L.திருஞானசம்பந்தத்திற்கு ஐம்பத்தேழு வயதுக்குமேல் இருக்கும். அதனால்தான் இராஜாஜி என்னை முறைத்து முறைத்துப் பார்த்தார். இதனைப் புரிந்துகொண்ட நான், என் முதலெழுத்து அ.ச.வே தவிர T.L. இல்லை என்று கூறியவுடன் அந்தச் சாணக்கியரின் சந்தேகம் தீர்ந்துவிட்டது.

இதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து ஒரு நாள் வள்ளல் அழகப்பச் செட்டியார் என்னை அழைத்து “பேராசிரியரே! உங்களுக்கும் இராஜாஜிக்கும் என்ன மனத்தாங்கல்?” என்று கேட்டார். ஒரு முறை தவிர அவரைப் பார்த்ததுகூட இல்லை என்று விளக்கம் அளித்தேன். அப்பொழுது அழகப்பச் செட்டியார் கூறியதாவது “விஞ்ஞானச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள்