பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூதறிஞர் இராஜாஜி ♦ 97


தேர்ந்தெடுக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறார் இராஜாஜி, தமிழும் விஞ்ஞானமும் தெரிந்த தமிழாசிரியர் நீங்களென்று கூறி உங்களை அந்தக் குழுவில் சேர்க்கச் சொன்னேன் ‘தமிழாசிரியர்களே இதில் இடம் பெறக்கூடாது’ என்று கூறிவிட்டார். அது ஏனென்று எனக்குப் புரியவில்லை” என்றும் கூறினார்.

இவையெல்லாம் நிகழ்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. அக்காலத்தில் குன்றக்குடி ஆதீனகர்த்தராக இருந்தவரும், குன்றக்குடி அடிகளார் என்று அழைக்கப் பெற்றவருமான அப்பெரியார் அருள் நெறித் திருக்கூட்டம் என்ற ஓர் அமைப்பை நிறுவினார். அதன் தொடக்க விழா திருப்பத்தூரில் நடைபெற்றதாக நினைவு. அப்பொழுது இராஜாஜி முதல்வராக இருந்தமையால் அவரைத் தொடக்க உரைக்குப் போட்டிருந்தார்கள். அன்றைய விழாவிற்குத் தலைமை வகித்தவன் நான். வள்ளல் அழகப்பச் செட்டியாரும் இராஜாஜியும் சேர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்தனர். இராஜாஜி பேசி முடித்தவுடன் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் “இளைஞனே! எனக்குப் பல அலுவல்கள் இருக்கின்றன. ஆனால், நண்பன் அழகப்பன் ஒரு ஐந்து நிமிடமாவது உன்னுடைய பேச்சைக் கேட்டுவிட்டுப் போகவேண்டுமென்று வற்புறுத்துகிறான். ஆகவே, நீ பேசஆரம்பித்தவுடன் ஐந்து நிமிஷம் கேட்டுவிட்டு நான் புறப்படுகிறேன். நீ தவறாக நினைய வேண்டா” என்றார். ‘அப்படியே செய்யுங்கள் ஐயா’ என்று கூறிவிட்டு நான் பேசத் தொடங்கினேன். ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குமேல் என் உரை நீண்டுவிட்டது. இராஜாஜிபற்றிய நினைவே இல்லை. பேசி முடித்தவுடன்தான் அவர் அமர்ந்திருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. ‘மன்னிக்க வேண்டும் ஐயா! என் உரை நீண்டு விட்டது’ என்றேன். “உன் பேச்சில் லயித்துவிட்டேன். இக்காலத்தில் வெறும் பஜனை பாடிச் சமயத்தை வளர்க்க முடியாது.