பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 131


அழைப்பதில்லை. இந்த நிலையில் பெரியார்தான் என்னை அழைத்தார். என் பேச்சு வெறி தணிய அவர்தான் இதற்கு ஒரு வடிகால், இந்த நேரத்தில் உனக்கொன்று சொல்கிறேன். என்னைப் போலவே நீயும் பேசிக்கொண்டே இருக்கிறாய். ஆனால் இந்த வெறி அடங்கப் போவதில்லை. வயது ஏறஏறப் புதியவர்கள் வர வர உலகம் உன்னை ஒதுக்கிவிடும். அப்படிப்பட்ட காலம் வரும்வரை காத்திராமல் இப்பொழுது தொடங்கியே மேடைப் பேச்சைக் குறைத்துக் கொள். நாளாவட்டத்தில் மேடையில் பேசுவதையே விட்டுவிடு. அத்தகைய காலத்தில் தோன்றும் புதிய சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடு. இப்பொழுது நான் கூறியதில் மிகக் கவனமாக இரு” என்று அறிவுரை வழங்கினார்கள். அந்த அறிவுரை 1995 முதல் என்னால் கடைப்பிடிக்கப்படுகிறது. மகான்களின் அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால் என்ன என்ன நன்மைகள் பெருகும் என்பதை நன்கு உணர்கின்றேன்.

திரு.வி.க.வின் வாழ்க்கை முடிவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், அவர் படுக்கையில் இருந்தபோது அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். “சம்பந்தா! என்னுடைய வாழ்வு முடிந்தபிறகு எனக்குக் கொள்ளி வைக்கும் பணியை உனக்கு விட்டுவிடுகிறேன். அனைவரிடமும் கூறிவிட்டேன். அதை நிறைவேற்றி விடு” என்றார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவரைப் பார்க்கச் சென்ற மு.வரதராசனிடம் என்னிடம் கூறியதையே எடுத்துக்கூறி “நீ ஊரிலிருந்தால் நீயும் அவனுடன் சேர்ந்து கொள்ளி வைக்கும் பணியைச் செய்க” என்று கூறினாராம்.

ஒரு வகையாக தமிழ்த் தென்றலின் மூச்சு நின்றது. பெருங்கூட்டம் கூடிற்று. மரியாதை செய்யவேண்டும் என்று சொல்லித் தொழிற்சங்கத்தார் அவருடைய பூதவுடலைப் பெரம்பூருக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். போகிற