பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ♦ நான் கண்ட பெரியவர்கள்



இன்னும் ஒரே ஒரு நிகழ்ச்சி. அதுவும் மனத்தில் நீங்காத நினைவு. 1935 என்று நினைக்கிறேன். தந்தையார் மலேசியா செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டிருந்தார். திடீரென்று நிமோனியாக் காய்ச்சல், ஒன்றும் மருந்துகள் இல்லை. டாக்டர் சோமசுந்தரம் என்பவர்தான் குடும்ப மருத்துவர். அவர் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிலை தாண்டி, “இனி ஒன்றும் முடியாது” என்ற நிலைக்கு வந்துவிட்டது. அப்பொழுது டாக்டர் சோமசுந்தரம், அமிர்தம் செட்டியார், ஜம்புலிங்கம் செட்டியார் ஆகிய நண்பர்கள் எல்லாம் தந்தையாருடைய இறுதி நிலை அறிந்து, வீட்டில் வந்து கூடிவிட்டனர். தாயார் அவர்கள் பூசைக்குச் சென்றவர் திடீரென்று பத்ரகாளி போல் வந்து சேர்ந்தார். “அடே சம்பந்தா, மோரைக் கரைத்துக் கொண்டு வா, பெருங்காயத்தைப் போட்டு உங்க அப்பாவிற்குக் கொடுக்க வேண்டும்” என்றார். “அம்மா இந்த நிமோனியாக் காய்ச்சலில் மோர் கொடுத்து விரைவில் அனுப்பணுமா” என்று நொந்துபோய்க் கேட்டார். அவரிடத்தில் மரியாதையும், அன்பும் கொண்ட தாயார் “டாக்டர், உங்கள் வைத்தியம்தான் இதுவரை பார்த்தீர்களே. ஒன்றும் கையால் ஆகாது என்று விட்டுவிட்டீர்களே. இனி விட்டுவிடுங்கள்.” என்றார். இது “எனக்கும் என் கணவருக்கும் உள்ள விஷயம்” என்றார். என் தங்கையின் கணவர் காலஞ்சென்ற இராமலிங்கம் கூட இருந்தார். அவரும் இதைத் தடை செய்து பார்த்தார். ஆனால், தாயார் நின்ற நிலையில் ஒரு கண்ணைச் செருகி வைத்துக்கொண்டு, “இதனைச் செய்” என்றவுடனே நான் மோரைக் கரைத்து உப்பும், பெருங்காயமும் போட்டுக் கொண்டு வந்தேன். ஒரு இரண்டு டம்ளர் மோர் இருக்கும், பக்கத்திலிருந்த தாயார் தந்தையாரைத் தூக்கி. ஏறத்தாழ மேற்சுவாசம் காணுகின்ற நிலை அப்பொழுது அவரை என் மைத்துனர் தோளில் சாய்த்துவிட்டு அந்த டம்ளர் மோரை எடுத்து, “இந்தாங்க குடிங்க கருணாம்பிகை குடிக்கச் சொல்கிறாள்” என்றார்.