பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அமைதியாக இருந்து தோசையைச் சாப்பிட்டுவிட்டு, அந்தத் தட்டைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு, ஐயங்கார் வீடு ஆதலால் சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்தேன். இவற்றையெல்லாம் கவனித்திருந்த அவர் மனைவியார் நான் செய்தவற்றையெல்லாம் அவரிடம் கூறிவிட்டார். “முதலியார் மகனோல்லியோ! அதனாலை எல்லாம் தெரிஞ்சிருக்கு” என்று கூறிவிட்டு, என் தோளில் கைவைத்து “வா, இப்படியே திருவேட்களம் சாலையில் கொஞ்சம் துாரம் உலவிவிட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றார்.

சாலையில் இறங்கிய கணத்தில் நான் வகுப்பறையில் கடைசியாகச் சொன்ன வாக்கியத்தை அப்படியே திருப்பிக் சொல்லி, மேலே பேசச் சொன்னார். அக்காலத்தில் நான் தீவிரப் பொதுவுடமைவாதியாக இருந்தேன். அந்த அடிப்படையில் குறளுக்கு விளக்கம் சொன்னேன். அரைமணி நேரம் உலவிவிட்டு வீட்டுக்கு வந்து அவரை விட்டுவிட்டு, நான் விடுதிக்கு வந்துவிட்டேன்.

மறுநாள் மாலை பாரதியார் என்னை அழைத்தார். அவர் அறைக்கு நாங்கள் போனதும் சுவாமிகளும் வந்து சேர்ந்தார். சுவாமிகள் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. “பாரதி இவன் நிசமாகவே முதலியார் மகன்தான். தினம் ஒரு மணிநேரம் பாடம் எடுப்பதானால் நான் பாடம் எடுக்கச் சம்மதிக்கிறேன்” என்றார்.

பாரதியாருக்கு ஒரே கலக்கம். ஒரு ஆசிரியருக்கு ஒரு பாடத்தைத் தினந்தோறும் நடத்த எப்படி அட்டவணை போட முடியும்? இதனை அவர் வெளியிட்டபோது என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் என் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்துவிட்டன. நான் குறுக்கே புகுந்து இது