பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஒரே நேரத்தில் 180 (டிகிரி கோணத்தில்) இருக்கும்நிலை மூன்று நாட்களில் இருந்ததாகக் கூறினார். அது கேட்ட மு.இரா. அவர்கள் ‘ஏழாம் நூற்றாண்டு அம்மையாரின் காலம்’ என்ற முடிவிற்கு வந்துவிட்டார். ஆராய்ச்சியாளர் அதிகமில்லாத அக்காலத்தில் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.

சுவாமிகள் எங்களுக்கு வகுப்பு நடத்துகையில் “நீ அந்த நூலைப் படித்திருக்கிறாயா?” என்று என்னைக் கேட்டார். படித்துள்ளேன். அதில் ஒரு பெருந்தவறு நேர்ந்துவிட்டது என்று கூறியவுடன் சுவாமிகளுக்கு மற்றோர் அதிர்ச்சி. ‘நீ சொல்வதை விளக்கிக் கூறு’ என்றார். ‘அம்மையார் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில், அண்மையில் அங்குச் சென்றிருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலை ஊரை ஒட்டியிருப்பதால் சூரிய அஸ்தமனம், மதியம் மூன்றரை அல்லது நான்கு மணிக்கு முடிந்துவிடும். அதன் பிறகு அந்தி வெளிச்சந்தான் இருக்கும். இந்த ஊரில் பிறந்து, இங்கேயே வளர்ந்த நாச்சியார் “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று” என்று பாடினால், ஒன்றுக்கொன்று 180 டிகிரியாக இருக்கவே முடியாது. கிழக்கே எழும் வெள்ளிக்கு 130 டிகிரி கோணத்தில்தான் வியாழன் நிற்குமேதவிர, 180 என்பது இருக்கவே முடியாது. திரு. பிள்ளை அவர்களிடம் இந்த இரண்டு கோள்களுக்கும் இடைப்பட்ட கோணம் 130 என்று திரு. மு. இரா கூறியிருந்தால் கணக்கு வேறு விதமாக இருக்கும்” என்று கூறினேன். என்னுடைய வாதத்திலுள்ள உண்மையை உணர்ந்துகொண்ட சுவாமிகள் “முதலியார் மகனே! என்னுடைய அம்மான்சேய்க்கு இதுபற்றி எழுதுகிறேன்” என்று கூறினார். திரு. மு.இரா. இதற்கு என்ன விடை கூறினார் என்பது எனக்குத் தெரியாது.