பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 ♦ நான் கண்ட பெரியவர்கள்


திருப்பெருந்துறைக்கு இனிமேல் போகலாம்’ என்றார். பிறகு திருப்பெருந்துறை சென்று வழிபட்டுவிட்டு, காரைக்குடி திரும்பினோம். மிக்க ஆவலோடு கணேசன் ‘என்ன சிவராம்ஜி நான் சொன்னபடி திருப்பெருந்துறை சென்றீர்களா, தரிசனம் செய்தீர்களா?’ என்று கேட்டார். ஒரு சிறிதும் சிரிப்பில்லாமல் ‘நீ சொன்ன திருப்பெருந்துறைக்கும் சென்றோம். இந்தப் பயல் ஏழு மைல் தூரத்தில் உள்ள திருப்பெருந்தறைக் கோயிலைக் காட்டினான். அந்தத் திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்தோம். ஒரு சின்ன வித்தியாசம். நீ சொன்ன இடத்தில் இருந்த அத்திருப்பெருந்துறை முழுவதும் பூமிக்கு அடியில் போய்விட்டது. நீ தவறு சொல்லமாட்டாய் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் அந்த இடத்தில் இறங்கி சுற்றிவந்து வழிபட்டோம். இந்தப் பயல் காட்டிய புதிய திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்துவந்தோம்’. - இத்தனைக்கும் ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் பேசினார் சிவராமன். அந்த மாமனிதரின் மற்றொரு பக்கம் இது.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க, சிவராமன் அவர்கள் மூலமாக இறைவனே எனக்கொரு பேருதவி செய்தான். அதை இங்கே விவரிப்பது இன்றியமையாததாகும். அமரர் கிருஷ்ணசாமிப் பிள்ளை திருமதி உருக்குமணி அம்மாள் என்ற தம்பதியர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்து ‘பன்னிரு திருமுறைக் கட்டில்’ என்ற ஒன்றை நிறுவினர். அதன் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக அந்த அமைப்பின் கிளையாகக் காஞ்சியில் நிலவிய தத்துவத் துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். பெரிய புராணத்தைப் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தேன். நல்ல வடமொழி அறிஞரும் வேத விற்பன்னருமாகிய அமரர் டாக்டர் நஞ்சுண்டன் என்னுடன் பணிபுரிந்தார். அவரிடம் ரிக்கு வேதம், கிருஷ்ண யசுர் வேதம் ஆகியவற்றை ஓரளவு பயின்றுவந்தேன்.