பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் அறிந்த கி.வா.ஜ.

திரு கி.வா. ஜகந்நாதன் அவர்களது தமிழ் இலக்கியப் பணி குமரிமுதல் இமயம்வரையிலும், கடல் கடந்த இலங்கை, பர்மா, மலேசியா, பாரிஸ், லண்டன் போன்ற இடங்களிலும் தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவி யிருக்கிறது. -

தம் பன்னிரண்டாம் வயதிலேயே கவி பாடும் ஆற்றலும், கட்டுரை எழுதும் திறமையும் பெற்ற இவர், தம் இறுதிக் காலம் வரை தமிழுக்கும், தமிழருக்கும் தம் கட்டுரைகளால், கதைகளால், கவிதைகளால் இலக்கிய, சமயச் சொற்பொழிவுகளால் பெருந்தொண்டாற்றி வந்திருக்கிறார்,

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய தலை மாணாக்கராக இருந்து தமிழ் பயின்று, அவர்களது அருந்தமிழ்ப் பணிக்கும் துணை நின்று, ‘கலைமகள்” மாதப் பத்திரிகையின் நிர்வாக ஆ சி ரி ய ர க ஐம்பதாண்டுகளுக்குமேல் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நூல்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டனவாகும். --

குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர். சாதாரணமாக உரையாடும்போதே இரு பொருள்படப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. ஹாஸ்யத்துக்கு ஹாஸ்யமும், விளக்கத்திற்கு விளக்கமும் கிடைக்கும். அதே சமயம் யாருடைய மனமும் சிறிதளவும் புண்படா வண்ணம் பேசுவதில் சமர்த்தர்.