பக்கம்:நாயகர் பெருமான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஆனால் அது காதில் இல்லை. மடியில் இருந்தது. மடியில் இருந்த பஞ்சை எடுத்துக் காதில் வைப்பதற்குள் வேத வாசகங்கள் அவர் செவியில் விழுந்து விட்டன.

மனித இனத்தின் நன்மைக்காக இறைவனால் மொழியப் பட்ட அத்திரு வாசகங்களை ஒரு முறை கேட்ட செவிகளை மீண்டும் மூட மனம் வருமோ! கையில் எடுத்த பஞ்சைக் காதில் வைக்க மறந்தார் துபைல்! அவர் மெய்யெல்லாம் ஒரு புளகாங்கித உணர்ச்சி ஏற்பட்டது. சொற்பொழிவு முழுவதையும் விருப்பத்தோடு கேட்டுக் கொண்டு நின்றார்.

பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்து வீடு திரும்பிய போது, தாய்ப்பசுவைத் தொடரும் கன்றைப் போல துபைலும் அவர்களைத் தொடர்ந்து சென்றார். முதலில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த நாயகமவர்கள், யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டுக் கதவைத் திறந்து விட்டார்கள்.

பெருமதிப்புக்குரிய செல்வந்தராகிய துபைல், பெருமானவர்களின் திருவடியில் விழுந்து கண்ணீர் விட்டு “நான் தங்கள் அடியார்க்கு அடியான்” என்று மனங்கசிந்து கூறினார்கள்.

துபைல் என்ற இப்பெரியவர் தாம் சேர்ந்தது மட்டுமன்றி வேறு பலரையும் இஸ்லாத்தில் சேரத் தூண்டிய பெருமை மிக்கவராவார்.