பக்கம்:நாயகர் பெருமான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

படை வீரர்கள் மதினா நகரின் எல்லைக்கு வெளியே வந்ததும், அவர்களை ஓரிடத்தில் நிறுத்திச் சரிபார்த்துக் கொண்டு வந்தார் பெருமான். உரிய வயது வராத சிறுவர்களையும், மிக முதிர்ந்த வயதுடையவர்களையும் ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டளை யிட்டார்கள். ஆனால், நம்பிக்கையும் உணர்ச்சியும் அதிகம் உள்ள ஓர் இளைஞன் அவ்வாறு போக மனமற்றிருந்தான். அவன் இதற்காக ஒரு தந்திரம் செய்தான். தன்னைப் பரிசோதிக்க நேரிட்ட போது, பெருவிரல் நுனியில் எம்பி நின்று கொண்டு, தான் உயர முள்ளவன் என்று காட்டினான். அவன் தந்திரம் பலித்தது. அவனைப் பெரிய மனிதனாகக் கருதிப் படையில் லவத்துக் கொண்டார்கள். அச்சிறுவன் பெயர் ராபிஅ-பின் கதீஜ்.

அடுத்து, அவனினும் வயது குறைந்த ஸம்ரா என்ற சிறுவனைத் திரும்பிப் போகச் சொன்ன போது, அவன் மறுத்து விட்டான். தான் ராபி அவை மல்யுத்தத்தில் தோற்கடிக்கும் வலிமையுடையவனென்றும், அப்படியிருக்க அவனே படையில் சேர அனுமதியுள்ள போது தான் ஏன் சேரக் கூடாதென்றும் கேட்டான் ஸம்ரா. உடனே இருவரையும் மல்யுத்தம் செய்யவிட்டார்கள். அதில் ஸம்ரா வென்றான். ஆகவே, அவனும் போர்ப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.