பக்கம்:நாயகர் பெருமான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கஅபின் சகோதரர் முஸ்லிமாகியிருந்தார். அவருடைய இடைவிடாத போதனையினால் கஅப்பும் இஸ்லாத்தைத் தழுவ எண்ணங் கொண்டார். ஆனால் பெருமானின் கட்டளைப்படி முஸ்லிம்கள் தன்னைக் கண்டறிந்து கொன்று விட்டால் என்ன செய்வதென்ற அச்சமும் அவர் உள்ளத்தில் தோன்றியிருந்தது.

ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அவர் மதீனா வந்து சேர்ந்தார். மதீனா நகரில் உள்ளவர்களுக்கோ அவர் யாரென்று தெரியாது.

க அப் பள்ளிவாசற் பக்கம் வந்து சேர்ந்த போது பெருமானவர்கள், மக்கள் நடுவில் நின்று இறைவன் உண்மைகளையும் கட்டளைகளையும் எடுத்தோதிக் கொண்டிருந்தார்கள். மக்கள் பயபக்தியுடனும் உன்னிப்பாகவும் அத்திரு மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கஅப் கூட்டத்தினுள் புகுந்தார். பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்ததும் அவர் முன் சென்றார்.

“ஆண்டவனுடைய திருத்தூதரே! கஅப் என்பவனை ஒரு முஸ்லிமாகத் தங்கள் திருமுன்னே கொண்டு வந்தால் நீங்கள் அவருக்கு மன்னிப்புக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

“ஆம்; மன்னித்து விடுவேன்” என்று நாயகமவர்கள் கூறினார்கள்.

“நான் தான் கஅப்” என்றார் புலவர்.