பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 11

10. உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,

கெடாஅத நல்லறமும் செய்யார்-கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர்; வான்தோய் மலைநாட! உய்த்தீட்டும் தேனீக் கரி. வானளாவிய மலைமுடிகளையுடைய நாட்டிற்கு உரிய தலைவனே தாம் நன்றாக உடுத்து அநுபவிக்காமலும், வயிறார உண்டு பயனடையாமலும், தம் உடலினை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத நல்ல தருமங்களைச் செய்யாதவர் களாகியும், யாசகர்களுக்குக் கொடாதவர்களாகியும், பொருளைச் சேர்த்து வைப்பவர்கள் இருக்கிறார்களே அவர்கள், உறுதியாக அதனை ஒருநாள் இழந்தே விடுவார்கள். இதற்கு பற்பல மலர்களின்றும் தேனைக் கொண்டு வந்து கூட்டிலே சேர்த்துவைக்கும் தேனியே நல்ல சான்றாகும்.

‘தேன் கூட்டினின்றும் தேனைப் பிறர் எடுத்துக் கொள்வதுபோல, அவனுடைய அவ்வளவு பொருளையும் எவரேனும் ஒரு நாள் கவர்ந்து கொண்டு போய்விடுவர் என்பது கருத்து. ‘தம் உடம்பு செற்றும் கெடாத நல்லறம் என்பது, தம் உடம்பு அழியினும் தாம் அழிவில்லாது நிலைத்திருக்கும் நல்ல அறச் செயல்கள். உய்த்தல்-கொண்டு வருதல். ஈட்டல்சம்பாதித்தல்.

2. இளமை நிலையாமை

இளமை துடிப்பான பருவம். உடலின் வனப்பும் கட்டும் பல்வகையான விருப்பங்களைத் தூண்டிவிடுகின்றன. அந்த வேட்கைக்குள் கட்டுப்பட்டு, அதன்கண் ஈடுபடுவோர் பலர். அவர்களுடைய ஆர்வங்களும் அநுபவங்களும் நிலையற்றன என்று, எவரேனும் சொல்லமுடியுமோ? முடியாது.

ஆனால், இளமைப் பருவத்தின் ஆசாபாசங்களையும் கட்டுப்படுத்தி நல்லொழுக்க நெறியில் வாழ்வதே சிறப்பு உடைமையாகும். இளமையின் நிலையாமையை உணர்ந்து ஒழுக்கமுடன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வாழ்தல் வேண்டும்.

இதனை வலியுறுத்துவார், இளமையின் நிலையாமை யான இயல்பினையும், அதன் பருவக் கோளாறுகளிலே ஈடுபடாதவர்கள், உடலையும் உள்ளத்தினையும் கட்டுப்படுத்தி உறுதியாக வாழ்ந்தவர்கள், அடையும் நிலையான இன்பங் களையும் வகுத்துக் கூறுகின்றார், இந்தப் பகுதியில்.