பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 49

‘எவ்வளவு வறுமை வந்த காலத்தினும், பொறுமையோடு அதனைச் சகித்துக் கொள்ளவேண்டுமே யல்லாமல், தவறான செயல்களிலே ஈடுபடக்கூடாது’ என்பது கருத்து. கைத்துகையினின்றும் கவிந்த-மூடிய

9. பிறர்மனை நயவாமை

பிறருடைய மனைவியரைக், காமத்தால் அறிவிழந்து விரும்பாமைபற்றிக் கூறுவது இந்தப் பகுதி. இல்லற வாழ்விலே தன் மனைவியுடன் கூடி இன்புற்று அறம்பேணும் நடத்தை யினை மேற்கொண்டவன் இல்லறத்தான். எனினும், காமத்தால் அவன் கட்டுமீறிச் செல்லுதல் பற்றி எண்ணுவது கூடாது என்று எச்சரிப்பது இந்தப் பகுதியின் நோக்கமாகும்.

காமம் பொறுத்தற்கு அரியது என்பதுபற்றிப் பொறையுடைமைக்குப் பின் இது வைக்கப்பட்டது. இது பொறுத்தற்கரிய பெருங்குற்றம் என்பதும் உணர்த்தப்பட்டது.

‘இல்வாழ்வு’ ஒவ்வொரு இல்லத்துத் தலைவியின் அமைதியைப் பொறுத்தே அமைவது. அதனால், பிறனின் இல்லத் தலைவியை விரும்புவதன்மூலம் ஒருவன் அந்த அறத்தின் அடிப்படைக்கே ஊறு செய்பவனாகின்றான் என்பதை உணரவேண்டும். அதனால், அது மிகவும் தீயது என உணர்ந்து அதனைவிடவும் வேண்டும்.

81. அச்சம் பெரிதால், அதற்கின்பம் சிற்றளவால்;

நிச்ச நினையுங்காற் கோக்கொலையால்; - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால்; பிறன்தாரம் நம்பற்க, நாணுடை யார்!

பிறருடைய மனைவியரை விரும்பி, எழுகின்ற காலத்திலே தம்முள் தோன்றுகின்ற அச்சமோ மிகவும் பெரிதாகும். அந்தப் பேரச்சத்திற்குக் கைமாறாகக் கிடைக்கும் இன்பமோ மிகவும் சிறிதளவினதே. அந்த ஒழுக்கத்தின் உண்மையான நிலையினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, அரசனாற் கொலை செய்யப்படுதலும் நேர்வதாகும். எந்நாளும் நரகத்திற்கே கொண்டுவிடும். மிகுந்த தீவினையும் அதுவாகும். அதனால், நாணம் உடையவர் எவருமே அயலானது மனைவியை விரும்பாதிருக்கக் கடவர்.

‘பிறன் மனைவியை விரும்புதல் இம்மையினும் துன்பந்தரும்; மறுமையினும் துன்பந்தரும் என்பது கருத்து.