பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாலடியார்-தெளிவுரை

அடையாத ஒருவனோ உலையிலிட்டுக் காய்ச்சுவது போன்ற கொடிய துன்பத்தையே எந்நாளும் அடைவான்.

இதனால், செல்வம் வறுமை என்பவற்றின் உண்மையான நிலைமை கூறப்பட்டது. ‘பொருளற்றவனுக்கு அறமும் செய்யவியலாது; இன்பமும் கிடைத்தலரிது; துன்பமே பெரிதாகும் என்பது கருத்து.

115. நல்லாவின் கன்றாயின், நாகும் விலைபெறுஉம்;

கல்லாரே யாயினும், செல்வர்வாய்ச் சொற்செல்லும், புல்லீரப் போழ்தின் உழவேபோன் மீதாடிச், செல்லாவாம், நல்கூர்ந்தார் சொல்.

நல்ல பசுவின் கன்று என்றால், அஃது இளம் பெட்டைக் கன்றாயினும் நல்ல விலையினைப் பெற்றுத்தரும். அது போலவே, படியாதவர்களாயிருந்தாலும், அவர்கள் செல்வர் களாயிருந்தால், அவர்களுடைய வாய்ச்சொற்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும். அற்ப ஈரமுள்ள பொழுதிலே உழப்படும் உழவினைப் போல, மேலே மட்டுமே ஏற்புடைய தாகத் தோன்றி வறுமையுடையவர் வாய்ச்சொற்கள், எவருடைய உள்ளத்தும் ஆழமாகக் கொள்ளப்படாததாகவே போய்விடும்.

செல்வர் மூடராயினும், அவரிடமிருந்து பயன்பெறலா மென்பது கருதி அவர் சொற்களைப் பலரும் மதிப்பர். வறியவர் சொற்களிலே அறிவுடைமை தோன்றினும் மேலுக்குத் தலையை அசைப்பார்களே அல்லாமல் உள்ளத்துள் எவரும் கொள்ளார். இதுவே, சொல்லின் உண்மையான நிலையாகும்.

116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்-தடங்கண்ணாய்! உப்பொடு நெய், பால், தயிர், காயம் பெய்தடினும், கைப்பறா, பேய்ச்சுரையின் காய்.

விசாலமான கண்களை உடையவளே இயல்பாகவே அடக்கம் உடையவரான தன்மை இல்லாதவர்கள், மெய்ம்மையான அறிவினை உணர்த்தும் நூல்களை எல்லாம் எப்போதும் விரிவாகக் கற்றாலும், ஒரு பொழுதும் அடக்கம் உடையவராகவே மாட்டார்கள். எதுபோலவென்றால், உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் சேர்த்துச் சமைத்தாலும், பேய்ச்சுரைக்காய் தன்னுடைய இயற்கையான கசப்பினின்றும் நீங்காததைப் போல என்க.