பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சாவு வெற்றி கொள்கிறது; சங்கு முழங்குகிறது; இது தான் உன் வாழ்வு; இப்பொழுது இளமை வளர்பிறை; பின் தேய்பிறை; முடிவு இருள் நிறை அமாவாசை.

“பள்ளிக்குச்சென்றவன் வருவான், விரைந்து கொள்ளி போட,” என்று காத்திருக்கிறார்கள் அவன் சுற்றத்தினர் வேகாத உடம்போடு ஏகாதே வைத்திருக்கிறார்கள். அவள் அவனுக்குத் தாய்; தாய்க்கு அவன் தலைப்பிள்ளை; அவன் என்ன சொல்கிறான்?

“இவள் எனக்குத் தாய்! இவள் எங்கே சென்றாள், தனக்குத் தாயாகிய ஒருத்தி இருக்கும் இடம் தேடிச் சென்றாள்; அவள் தாய், தன் தாயை நாடிச்சென்றாள், இப்படி தாய் சென்ற இடங்களுக்குத் தாவிச் சென்றுவிட்டனர். அழுது பயன் இல்லை” என்று ஆறுதல் அடைகிறான். நிலையாமை எது என்று அந்த இளமை உணர்கிறது.

வெறி ஆடும் களத்திற்குச் செம்மறி ஆட்டை அந்த நெறி கெட்ட பூசாரி, கயிறு கட்டி இழுத்துச் செல்கிறான், கையில் பசுந்தழை காட்டி, அதன்பசியை மூட்டிவிடுகிறான். பூசாரியை ஆடு நம்புகிறது எதுவும் சிந்தியாமல் அவன் பின் செல்கிறது. வாலிபப் பிள்ளைகள்! இவர்களுக்கு யார் என்ன சொல்ல முடியும்? மயக்கம்! அவர்கள் காட்டுவது இல்லை தயக்கம்; விரும்புகின்றனர் மகளிர் முயக்கம்; அவர்கள் கதை? முடிவு? நாம் ஏன் சொல்வோம் அதனை; மயக்குகிறாள் ஒரு மாது; அழிகிறான் இந்தச் சாது; இது இவன் வாழ்க்கைக்கு ஒவ்வாது.