பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

‘வேல் கண்ணள் இவள்’ என்று கருதி, அவள் பின் செல்கிறான்; அவள் ஒரு காலத்தில் கோல் கண்ணள் ஆவது உறுதி; கோல் ஊன்றி நடக்கப்போவது இறுதி; இஃது அவனுக்கு மறதி.

இவனும் கிழம்; முதிர்ந்துவிட்ட பழம்.

“ஏன்யா! எப்படி இருக்கிறாய் ? பல் என்ன செய்கிறது?”

“பல்லவி பாடுகிறது!”

“சோறா கஞ்சியா ரொட்டியா?”

“வெறும் இட்டலிதான்”.

“எழுபதா எண்பதா?” இது வயதைப் பற்றியது.

இப்படிக் கேட்ட காலம் பழைய காலம்; இப்பொழுது சர்க்கரை, கொழுப்பு, இரத்தக் கொதிப்பு இவற்றிற்கு இப்பொழுது எடைகள், அறிவுக் கருவிகள், திசை காட்டுகின்றன.

முதியவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் வினாக்கள் இவை. அவர்களுக்கே பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விடுகிறது. வேறு என்ன வினவ முடியும்? பிள்ளைகள், பேரன்கள், பேர்த்திகள் என்று கேட்டு அலுத்து விட்டனர்.

இந்த உடம்பினைத் தவிர்த்து வேறு கேள்விகளில் அவர்கள் தடம் புரள்வதில்லை; அவர்கள் நோக்கம் என்ன? ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? “அவன் உலகுக்குச் சுமை; ஏன் இப்படி இழுபறியாக இருக்கிறான்?” என்பது தான்.