பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

இளமை நில்லாது; முதுமை விலை போகாது: யாரும் மதிக்க மாட்டார்கள், இஃது இயற்கையின் நியதி.

“சரி வயது ஆகட்டும் காலம் வரும் பிறகு தருமம் செய்யலாம்; இப்பொழுது வளமாக வாழலாம்” என்று இயம்புகிறான்.

இறுமாப்பு உடைய இளைஞன் அவன்.

'தம்பி !' காற்றடித்தால் பழம்மட்டும் உதிர்வது இல்லை; செங்காயும் சிதைகிறது; உதிர்கிறது; நீண்ட நாள் வாழ்வது உறுதி இல்லை; அதனால், முடிந்த, வாய்ப்புள்ள நாள்களில் எல்லாம் அறம் செய்க! அதுவே தக்கது.

“ஆள் தேடும் படலத்தில் அந்தக் கறுத்தவன் சுற்றிக் கொண்டே இருக்கிறான்; ‘மாதம் இத்தனை வழக்கு’ என்று பதிவு செய்ய வேண்டும் என்பது காவல் துறைக் கட்டளை போலும்! சும்மா இருப்பவனையும் “வாடா நிலையத்துக்கு” என்று இழுத்துச் செல்வது பழக்கம்; அது காவல் நிலையம்; இந்தக் கறுத்தவனும் இதனைப்பார்த்துக் கற்றுக்கொள்கிறான். “சின்னப்பையன்தான்; என்றாலும், கள்ள வோட்டுப் போடும் வயது; வா” என்று இழுத்துச் செல்கிறான். அவள் தாய் அலறுகிறாள்! “என்னை அழைத்துப் போகக் கூடாதா!” என்று கத்துகிறாள்.

அதனை முன்னால் சொல்லி இருக்கலாமே; அவளுக்கு அந்த யோசனை வரவே இல்லை; பின்புத்தி, இழுத்துச் செல்பவன் காத்து நிற்கிறான்; அதனால், தம்பி ! தருமம் செய்; இஃது உன் வாழ்வின் கருமம்.