பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கிறது, வெடிக்கிறது; காற்று வெளியேறுகிறது. நீரோடு நீராய் அந்தக் குமிழி மறைந்துவிடுகிறது. வாழ்வு நீரோட்டம் போன்றது; குமிழிகள் தோன்றி வெடிக்கும். தனி மனிதன் ஒரு நீர்க்குமிழி; அவன் சரித்திரமும் அதனோடு முடிகிறது. குமிழி தோற்றம்; வடிவம், மாறி விடுகிறது; நீர் நிலைத்து நிற்கிறது.

ஒருவன் போனால் இந்த உலகம் குடிமுழுகிப்போவது இல்லை. நேற்று அவன் தன் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றான்; இன்று அடுத்த ஆள் அங்கு வந்து புதுக் குடித்தனம் நடத்துகிறான். தடி ஊன்றி நடந்த முதியவர் அடியெடுத்து வைத்து நடந்தவுடன் அங்கே ஒரு புதிய ஆத்திச்சூடி ஆரம்பமாகிறது; “தாத்தா! நீ கவலைப் படாதே! மற்றொரு ஆத்தாள் காத்திருக்கிறாள் அந்த இடத்தை நிரப்பிக் கொடுக்க”

மலைமீது மேகம் தவழ்கிறது; காற்றில் அசைந்து ஆடுகிறது; பின் மேகம் என்ன ஆயிற்று? கலைந்து விட்டது; படிவது போலத் தோன்றிய மேகம் மடிந்தும் போகிறது. ‘மடிந்தது’ என்று கூறமுடியாது; காற்றோடு காற்றாய்க் கலந்துவிட்டது. இந்த ஆராய்ச்சி நமக்கு ஏன்? அது மறைந்துவிட்டது; அவ்வளவுதான்.

“நீர்க்குமிழி யாக்கை, மலைமீது ஆடும் மேகம்; இன்னும் தெளிவாகக் கூறினால், “புல்நுனிமேல் பனிநீர்” இரவில் புல்நுனிமீது பனித்துளி படிகிறது; உடனே கதிரவன் ஒளிமுன் மறைகிறது. ஒளி உமிழ்ந்த பனித்துளி எங்கே? பசும்புல்லைக் குளிர்வித்த விண்துளி எங்கே! உடலையும் இயக்கித்தானும் உலவி வந்த உயிர் மறைகிறது.