பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்வம் நூல் எழுதக் காரணம் ஆகியது. செய்யுளுக்கு உரை தரும் நூல்கள் தொடர்ந்து வந்துள்ளன. அவை செய்யுளைப் படித்துப் பொருள் அறியத் துணை செய்கின்றன. தொடர்ந்து படிக்கப் பொறுமையும் இலக்கியப் புலமையும் தேவைப்படுகின்றன. அவை ஒரு சிலரே படிக்க முடியும்.

கற்றோரும், புலமை நிரம்பாதவரும் அறியும் வகையில் இச் செய்திகளைக் கூறினால் அவர்கள் பயன் அடைவர்; நூல் தரும் கருத்துகள் சிந்தனைகளைத் தூண்டவல்லன. ஒரே செய்யுளை வைத்து ஒரு சிறு கதை எழுதமுடியும்; ஏன் தொடர்கதையும் எழுதமுடியும். அருமையான கருத்துகள் இதில் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து எழுதினாலேயே கதை படிப்பது போன்ற சுவையும் அமைகிறது.

இதை எடுத்துச் சொல்வதற்கு ஆசிரியப் பயிற்சி தேவை; ஆசிரியத் தொழில் என் பழைய தொழில்; அதனை இன்னும் விடவில்லை; எழுதி மற்றவர்களுக்கு வெளியிடுகிறேன். அக் கருத்துகளை இன்றைய வாழ்க்கையோடும் நிகழ்ச்சிகளோடும் தொடர்புபடுத்திக் கூறும்போதே அவை விளக்கம் பெறுகின்றன. அதனால் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் செய்திகள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் நாலடியார் தரும் செய்திகள் ஆழம் மிக்கவை. அனுபவம் மிக்கவை; அறிவுரைகள்; அறவுரைகள். அதனால் கருத்து ஆழம் கொண்டது இந்நூல்; அதற்குத் துணையாக என் உரை நடை புதிய வடிவம் தாங்கி வாசகரைப் படிக்கத் தூண்டும் இயல்பு பெற்றுள்ளது.