பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டால் என்ன? வாய் முத்தம் உதிர்ந்தா விடும்?' என்று கேட்பர். அவர்கள் செயலில் நன்மை எதிர்பார்ப்பது போல அவர்களிடம் மன நன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மனம் எப்பொழுதும் நல்ல நிலையில் நின்று செயல்பட வேண்டும்; நன்மை கருதும் செயல்களையே அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

தனக்கு நூறு கஷ்டம் இருக்கலாம்; அவற்றை எல்லாம் நற்குடிப் பிறந்தவன் கவனித்துக் கொண்டு இருக்க மாட்டான். தனக்குள்ள இடர்களை எல்லாம் மடித்து வைக்கும் பழைய துணிகளைப் போல எடுத்து வைத்து விட்டு ஊருக்கு உறும் இடையூறுகளை எண்ணிச் செயல்படுவான். உச்சி மீது வான் இடிந்து விழுந்தபோதும் அச்சம் இல்லை என்று இறுமாந்து பேசும் தறுமாப்பு அவனிடம் அமைகிறது. பிடுங்கல்கள் நூறு இருந்தாலும் அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டு ஒடுங்கி இருக்க மாட்டான். தனக்குத் தலைவலிஎன்றாலும் மனவலி காட்டி பிறர் வலியைத் தீர்க்கத் தயங்கான். தொல்லைகள் தனக்குப் பல இருந்தாலும் அவையே வாழ்வின் எல்லை என்று அடங்கிவிட மாட்டான்.

ஒரு பக்கம் பாம்பு கவ்வுகிறது. அதற்காக வானத்துத் திங்கள் ஒளிவிடாமல் மறைந்துவிடுவதில்லை. தன் துயரைப் பொருட்படுத்துவது இல்லை; உலகுக்கு ஒளி தருகிறது. குடிப்பிறந்தவரும் துயரில் மடிந்து கிடப்பது இல்லை; பிறர் துயரைக் கடிந்து நீக்கி வாழ முற்பட்டுச் செயலாற்றுவர்.

மான்குட்டி மான்குட்டிதான்; அதற்குச் சேணம் பூட்டினாலும் அது குதிரையாகாது. புல்லைத் தின்பதில்